செய்திகள் (Tamil News)

13 ஓவருக்கு 125 ரன் இலக்கு- கெய்ல், ராகுல் அதிரடியால் 11.1 ஓவரில் பஞ்சாப் வெற்றி

Published On 2018-04-21 15:22 GMT   |   Update On 2018-04-21 15:22 GMT
மழை குறுக்கிட்டதால் 13 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கெய்ல், கேஎல் ராகுல் அதிரடியால் எளிதாக எட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. #KKRvKXIP
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. உத்தப்பா (34), கிறிஸ் லின் (74) தினேஷ் கார்த்திக் (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது கெய்ல் 49 ரன்னுடனும், கேஎல் ராகுல் 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் மழை நின்றதும் சுமார் 8.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லிவிஸ் விதிப்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏற்கனவே 8.2 ஓவர்கள் விளையாடிவிட்டதால், 28 பந்தில் 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சாவ்லா முதல் பந்தை வீசினார். அதை கெய்ல் சிக்சருக்கு தூக்கி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன்பின் மூன்று பந்துகளிலும் கெய்ல் ரன் அடிக்கவில்லை.



10-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சி செய்தார். ஆனால் அது கேட்ச் ஆனது. கேஎல் ராகுல் 27 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார்.

அடுத்து மயாங்க் அகர்வால் களம் இறங்கினார். கேஎல் ராகுல் அவுட்டாகும்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 20 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 3 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 12 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 12-வது ஓவரை குர்ரான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்களுடனும், அகர்வால் 2 பந்தில் 2 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
Tags:    

Similar News