செய்திகள்

2-வது டெஸ்ட் டிரா- சோதியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

Published On 2018-04-03 07:38 GMT   |   Update On 2018-04-03 07:38 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சோதியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிந்தது. எனவே, நியூசிலாந்து தொடரை கைப்பற்றி உள்ளது. #NZvENG
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களும், நியூசிலாந்து 278 ரன்களும் சேர்த்தன. 29 ரன்கள் முன்னிலையில் ஆடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் நியூசிலாந்து வெற்றிக்கு 382 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குடன் ஆடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 340 ரன் தேவை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

ஆனால், இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 219 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் லாதம் 83 ரன்னும், கிராண்ட்ஹோம் 45 ரன்னும் எடுத்தனர்.



முன்னணி வீரர்கள் வெளியேறிய நிலையில் சோதி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவரது விக்கெட்டை மட்டும் எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. சோதி 168 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிராட், மார்க்வுட், ஜேக் லிச் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால், தொடரை 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக டிம் சவுத்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை டிரென்ட் போல்ட் தட்டிச் சென்றார். #NZvENG
Tags:    

Similar News