செய்திகள்

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 192/6

Published On 2018-03-31 12:47 IST   |   Update On 2018-03-31 12:47:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. #NZvENG
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி இங்கிலாந்து அணியினர் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அலஸ்டைர் குக் 2 ரன், ஸ்டோன்மேன் 35 ரன், வின்ஸ் 18 ரன், கேப்டன் ஜோ ரூட் 37 ரன், தாவித் மலன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 94 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

8-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் மார்க் வுட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டியது.



இறுதியில், முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 90 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 97 ரன்னுடனும், லீச் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் பேர்ஸ்டோவ் சதமடித்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 6 விக்கெட்டும், போல்ட் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராவலும், லத்தாமும் களமிறங்கினர்.

இங்கிலாந்து அணியினரின் ஸ்டூர்வர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோரின் துல்லிய பந்து வீச்சில் நியூசிலாந்து அணியும் நிலை குலைந்தது. 35 ரன்கள் எடுப்பதற்கு முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பின் களமிறங்கிய விக்கெட் கீப்பட் வாட்லிங், கிரான்ட்தோம் ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாடினர். இருவரும் அரை சதமடித்தனர். கிராண்ட்ஹோம் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. வாட்லிங் 77 ரன்களுடனும், டிம் சவுத்தி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvENG #Tamilnews

Similar News