செய்திகள்

முதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் - முகமது ஷமி குற்றச்சாட்டு

Published On 2018-03-16 05:47 IST   |   Update On 2018-03-16 05:47:00 IST
ஹசின் ஜகான் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக முகமது ஷமி குற்றம் சாட்டியுள்ளார். #MohammedShami #HasinJahan
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், சமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

இதையடுத்து, சமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கடந்த 8-ம் தேதி கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹசின் மீது முகமது ஷமி புதிய குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். ஹசின் ஜகான், ஏற்கனவே திருமணமானதை மறைத்து அவர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக ஷமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2014ம் ஆண்டில் ஹசின் ஜகானுக்கும், எனக்கும் திருமணமாகும் முன்னரே, அவருக்கு முதல் திருமணம் நடந்து 2 மகள்கள் உள்ளனர். ஆனால் அதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். ஹசின் தன்னுடைய 2 மகள்களையும் தனது சகோதரியின் மகள்கள் என்றே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் எங்களுக்கு திருமணமான சில நாட்களுக்குப் பிறகே எனக்கு ஹசின் ஏற்கனவே திருமணமானவர் என்றும் 2 பெண் குழந்தைகளின் தாய் என்பதும் தெரிய வந்தது. நான் ஹசினுடன் சாமாதானமாக செல்லவே விரும்புகிறேன். நான் இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன், ஆனால் ஹசின் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னுடைய மகளின் எதிர்காலத்தை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஹசின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஷமி மறுப்பு தெரிவித்தார். ஹசின் ஜகானை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும் ஷமி கூறியுள்ளார். #MohammedShami #HasinJahan

Similar News