செய்திகள்
ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய தனஞ்ஜெயா

இரண்டரை நாளில் முடிந்த டாக்கா டெஸ்ட்: வங்காள தேசத்தை துவம்சம் செய்தது இலங்கை

Published On 2018-02-10 15:24 IST   |   Update On 2018-02-10 15:24:00 IST
இரண்டரை நாட்களிலேயே முடிவடைந்த டாக்கா டெஸ்டில் வங்காள தேசத்தை 215 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இலங்கை. #BANvSL
வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று முன்தினம் டாக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இருந்ததால், இரு அணிகளும் தலா ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது.

குசால் மெண்டிஸ் (68), ரோசன் சில்வா (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், முஸ்டாபிஜூர் ரஹிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேசம் 110 ரன்னில் சுருண்டது. மெஹிது ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார்.

112 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது, ரோசன் சில்வா 58 ரன்னுடனும், லக்மல் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


ஹெராத் பந்தில் ஆட்டமிழந்து சோகமாக வெளியேறும் இம்ருல் கெய்ஸ்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லக்மல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெராத் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இலங்கை அணி 226 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ரோசன் சில்வா 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 338 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் வங்காள தேச அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸிங் செய்வது எளிதானதல்ல. இதனால் வங்காள தேசத்தின் தோல்வி உறுதியானது.


நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹெராத்தை பாராட்டும் சக வீரர்கள்

கடின இலக்குடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் காட்ட 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

2-வது இன்னிங்சில் அறிமுக வீரரான தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், ஹெராத் நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ரோசன் சில்வா ஆட்டநாயகன் விருதையும், தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Similar News