செய்திகள்

நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வீசிய கோலிக்கு 25 சதவீதம் அபராதம்

Published On 2018-01-16 09:53 GMT   |   Update On 2018-01-16 09:53 GMT
நடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvIND #ViratKohli
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தென்ஆப்பிரிக்கா அணி 23.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருக்கும்போது திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சிறிது நேரத்தில் மழை நின்றபின் ஆட்டம் தொடங்கியது. அப்போது பவுண்டரி லைனில் (OutFeild) மிகவும் ஈரப்பதமாக இருந்தது. இதனால் பந்து ஈரமானது. ஈரமான பந்தால் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய திணறினார்கள்.

ஆகவே, விராட் கோலி மைதான நடுவர் மைக்கேல் காக்கிடம் புகார் அளித்தார். ஆனால் காக் விராட் கோலியின் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விரக்தியில் பந்தை தரையில் வேகமாக வீசினார்.

பின்னர் 29-வது ஓவர் முடிவில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய விராட் கோலி, டிரெஸ்ஸிங் அறை சென்று தலைமை பயிற்சியாளரை அழைத்துக் கொண்டு போட்டி நடுவரிடம் முறையிட்டார்.



மைதான நடுவரிடம் வாக்குவாதம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக பந்தை தரையில் வீசியதும் ஐசிசி-யின் வீரர்கள் நன்னடத்தை விதிக்கு மாறானது என மைதான நடுவர் மைக்கேல் காக் புகார் அளித்தார்.

விராட் கோலி தனது மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. #SAvIND #ViratKohli
Tags:    

Similar News