செய்திகள்

மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா ஆதரவாளர்களின் ரகளையால் பரபரப்பு

Published On 2017-12-30 01:35 GMT   |   Update On 2017-12-30 01:35 GMT
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் உண்டானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுடெல்லி:

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் மல்யுத்தத்தில் தகுதியான இந்திய வீரர்களை அடையாளம் காண்பதற்கான தேர்வு போட்டிகள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சாதனையாளரான சுஷில்குமார் தகுதி சுற்றின் அரைஇறுதியில் பர்வீன் ராணாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பர்வீன் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயற்சித்தார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் பர்வீன் ராணா, ‘மோசடி பேர்வழி’ என்று கோஷமிட்டனர். அரைஇறுதியில் சுஷில்குமார் வெற்றி பெற்ற பிறகு அரங்கின் வெளிப்பகுதியில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பர்வீன் ராணாவின் சகோதரர் நவீனும் தாக்கப்பட்டார். சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பர்வீன் ராணா குற்றம் சாட்டினார். அதே சமயம் சுஷில்குமார், ‘போட்டியின் போது ராணா என்னை கடித்து விட்டார். அதனால் எனக்கு பிரச்சினை இல்லை. என்னை சிறப்பாக செயல்பட விடாமல் தடுப்பதற்கு அவரது யுக்தியாக இது இருக்கலாம். எல்லாமே விளையாட்டின் ஒரு அங்கம் தான். மற்றபடி நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது’ என்றார்.

இருவரில் யாராவது வந்து புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் கூறியுள்ளது.

கடந்த மாதம் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது, சுஷில்குமாருக்கு மதிப்பு அளிக்கும் விதமாக அவருக்கு எதிராக மூன்று வீரர்கள் மோத மறுத்தனர். அதில் ராணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News