செய்திகள்

பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி 16-வது வெற்றியை ருசித்தது மான்செஸ்டர் சிட்டி

Published On 2017-12-17 04:59 GMT   |   Update On 2017-12-17 04:59 GMT
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை 4-1 என துவம்சம் செய்தது.
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தற்போதைய சீசனில் (2017-18) மான்செஸ்டர் சிட்டி அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் 15 வெற்றியை ருசித்திருந்த நிலையில் நேற்று, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது.



சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்து. கார்னரில் இருந்து அடித்த பந்தை இல்காய் கண்டோகன் தலையால் முட்டி கோலாக்கினார். அதன்பின் இரு அணி வீரர்களும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்க முடியாததால் 1-0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றிருந்தது.



2-வது பாதி நேரத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 70-வது நிமிடத்தில் கெவின் டி புருயின் ஒரு கோலும், 80-வது மற்றும் 90-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் அடுத்தடுத்து கோலும் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 4-0 என முன்னிலை பெற்றது.



காயம் காரணமாக வழங்கப்படும் கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் ஆறுதல் கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் சிட்டி 4-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக 16-வது வெற்றியை ருசித்துள்ளது.
Tags:    

Similar News