செய்திகள்

கான்பூர் ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா, கோலி சதத்தால் நியூசிலாந்துக்கு 338 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2017-10-29 17:11 IST   |   Update On 2017-10-29 17:11:00 IST
கான்பூரில் நடைபெற்று கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, கோலி சதத்தால் நியூசிலாந்து அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களம் இறங்கின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அணியின் ஸ்கோர் 29 ரன்னாக இருக்கும்போது தவான் 14 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது.

இவர்களது ஆட்டத்தால் இந்தியா 9.4 ஓவரில் அரைசதத்தையும், 18.4 ஓவரில் சதத்தையும் எட்டியது. 52 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா 106 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 59 பந்தில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 83 ரன்னை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இந்திய அணியின் ஸ்கோர் 259 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 138 பந்தில் 147 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது.



அடுத்து விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 44-வது ஓவரை சான்ட்னெர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து விராட் கோலி சதம் அடித்தார். அவர் 96 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா 6 பந்தில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். சதம் அடித்த விராட் கோலி 106 பந்தில் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 46.4 ஓவரில் 302 ரன்கள் எடுத்திருந்தது.



அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். போல்ட் வீசிய 48-வது ஓவரிலும், சவுத்தி வீசிய 49-வது ஓவரில் இந்தியா தலா 12 ரன்கள் சேர்த்தது.

கடைசி ஓவரை மில்னே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். மில்னே நேர்த்தியாக பந்து வீச இந்தியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் சேர்த்தது.



கேதர் ஜாதவ் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தினேஷ் கார்த்திக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி, மில்னே, சான்ட்னெர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

Similar News