செய்திகள்

110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார், ஜமைக்காவின் மெக்லியோட்

Published On 2017-08-09 04:02 IST   |   Update On 2017-08-09 04:02:00 IST
உலக தடகளத்தின் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்கா வீரர் மெக்லியோட், தனது பதக்கத்தை தாயாருக்கும், சக நாட்டவர் உசேன் போல்ட்டுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.
லண்டன்:

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில், எதிர்பார்த்தது போலவே ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்கா வீரர் ஒமர் மெக்லியோட் 13.04 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சீறிப்பாய்ந்த செர்ஜி ஷூபென்கோவ் (13.14 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ஹங்கேரி வீரர் பலாஸ் பாஜி (13.28 வினாடி) வெண்கலமும் வென்றனர். ரஷிய தடகள சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த நாட்டை சேர்ந்த செர்ஜி ஷூபென்கோவ், ‘பொதுவான தடகள வீரர்’ என்ற அங்கீகாரத்துடன் இந்த போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அமெரிக்க வீரர் அரைஸ் மெரிட் 13.31 வினாடிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

வெற்றிக்கு பிறகு 23 வயதான மெக்லியோட் கூறுகையில், ‘எனது ஓட்டத்தை எனது தாயாரும் நேரில் பார்க்க வந்திருந்ததால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஓடினேன். இந்த பதக்கத்தை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இன்னொரு வகையிலும் இந்த பதக்கத்தை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். 100 மீட்டர் ஓட்டத்தின் ஒலிம்பிக் சாம்பியன்களான எங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர் உசேன் போல்ட், வீராங்கனை எலானி தாம்சன் இருவரும் இந்த முறை சாம்பியன் மகுடத்தை வெல்ல தவறினர். அதனால் எனக்கு பலமான நெருக்கடி உருவானது. எனவே இங்கு எப்படியாவது வாகை சூடி ஜமைக்காவின் கொடியை பட்டொளி வீசச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதுவே எனக்கு உந்து சக்தியாகவும் அமைந்தது.

உசேன் போல்ட், இன்னும் நீங்கள் ஜாம்பவான் தான். இந்த பதக்கம் உங்களுக்காகவும் தான். ஜமைக்கா தடகளத்திற்கு நிறைய பெருமை சேர்த்திருக்கும் நீங்கள் இத்தகைய மரியாதை பெறுவதற்கு தகுதியானவர்’ என்றார்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் பெய்த் கிபிகான் (4 நிமிடம் 02.59 வினாடி) தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். அமெரிக்காவின் ஜெனிபர் சிம்சன் 2-வது இடத்தையும் (4 நிமிடம் 02.76 வினாடி), தென்ஆப்பிரிக்காவின் கேஸ்டர் செமன்யா 3-வது இடத்தையும் (4 நிமிடம் 02.90 வினாடி) பெற்றனர். 

Similar News