செய்திகள்

காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார்

Published On 2017-08-06 16:03 GMT   |   Update On 2017-08-06 16:03 GMT
ஜஸ்டின் காட்லின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது சரியான முறையல்ல என்று தடகள பெடரேஷனின் சர்வதேச சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இரண்டு பேருக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. ஒருவர் 10 ஆயிரம் மீ்ட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மோ பரா. இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு இதுதான் கடைசி உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர். இதனால் இந்த தொடரை வெற்றிகரகமாக முடிக்க எண்ணினார். அதன்படி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 10-வது வெற்றியை பதிவு செய்தார்.

மற்றொருவர் உசைன் போல்ட். உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். 30 வயதாகும் உசைன் போல்ட் கடந்த 2008-ல் இருந்து, அதாவது அவரது 21 வயதில் இருந்து உலகின் அதிவேக மனிதனாக திகழ்ந்து வருகிறார். 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியவர்.



2009-ம் ஆண்டு முதல் 2015 வரை இந்த மூன்று போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 8 தங்க பதக்கத்தை வென்று உலக சாதனைப் படைத்தவர். 2011-ல் 100 மீட்டர் ஓட்டத்தில் தவறு செய்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் லண்டன் உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முடிசூடா மன்னனாக திகழ்வேன் என்றார்.

ஆனால், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 3-வது இடத்தையே பிடித்தார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் முதல் இடத்தை பிடித்தார். இவர் இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடைபெற்றவர்.

உசைன் போல்டுக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காட்லின் வெற்றியால் அது முடியாமல் போனது.



இந்நிலையில் காட்லின் வெற்றி பெற்றது சரியான முறையல்ல என்று தடகள பெடரேஷன் சர்வதேச சங்கத்தின் தலைவர் செபஸ்டியான் கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செபஸ்டியான் கோ கூறுகையில் ‘‘இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடைபெற்ற ஒருவர், நம்முடைய பரிசை பெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவர் இங்கே பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளார்.

இது சரியான முறையாக தெரியவில்லை. உசைனின் கருத்துக்கள் பொதுப்படையானது என நான் கருதுகிறேன். இந்த பந்தயம் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News