செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகளில் 4-வது இடத்தில் இறங்கியது சாம்பியன்ஸ் டிராபியில் பாதிக்காது: ரோகித் சர்மா

Published On 2017-05-23 12:03 GMT   |   Update On 2017-05-23 12:03 GMT
ஐ.பி.எல். போட்டிகளில் 3-வது அல்லது 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடுவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் மூன்று நான்கு மாதங்கள் ஓய்வில் இருந்த ரோகித், ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கினார்.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடக்க வீரராக களம் இறங்காமல் 3-வது அல்லது நான்காவது வீரராகவே களம் இறங்கினார். இந்த இடத்திலும் பெரிய அளவில் ஸ்கோர் குவிக்கவில்லை.

இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மா, ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கியதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது ஆட்டம் பாதிக்கும் என்று பலர் கூறினார்கள்.



இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் 4-வது வீரராக களம் இறங்கியது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஐ.பி.எல். தொடரானது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது. ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் அணியின் பேட்டிங் பலத்தை சரிசெய்வதற்காக 4-வது இடத்திற்காக களம் இறங்குவதாக கூறியிருந்தேன். இரண்டு வகை கிரிக்கெட்டையும் ஏன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் ஐ.பி.எல். தொடரில் விளையாடி விட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக என்னை மாற்றிக் கொள்வதில் எந்த கடினமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News