செய்திகள்

சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ்

Published On 2017-05-13 18:08 IST   |   Update On 2017-05-13 18:08:00 IST
கான்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் லயன்ஸ்.
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அணிக்கெதிராக ஐதராபாத் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி குஜராத் லயன்ஸ் அணியின் வெயின் ஸ்மித், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்துக் கொண்டிருந்தது. பவர் பிளே-ஆன முதல் 6 ஓவரில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 27 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் அரை சதமும், ஸ்மித் 31 பந்தில் அரைசதம் அடிக்க குஜராத் அணி 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

அந்த அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 111 ரன்னாக இருக்கும்போது ஸ்மித் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

13-வது ஓவரை மொகமது சிரஜ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 61 ரன்னில் அவுட் ஆனார். இது ஓவரின் கடைசி பந்தில் ரெய்னா அவுட் ஆனார். அத்துடன் அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். 120 ரன்னில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியின் ஸ்கோர் அப்படியே சரிய ஆரம்பித்தது.

இந்த விக்கெட்டுக்கள் இழப்பால் நிலைகுலைந்த குஜராத் அணியை ஐதராபாத் பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 19.2 ஓவரில் 154 ரன்னில் குஜராத்தை ஆல்அவுட் ஆக்கினார்கள். ஜடேஜா 8 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். நான்கு பேர் டக்அவுட்டில் வெளியேறினார்கள். ஐதராபாத் அணி சார்பில் மொகமது சிரஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

Similar News