செய்திகள்

மீண்டும் சொதப்பல்: 96 ரன்கள் மட்டுமே எடுத்து புனே அணியிடம் பணிந்தது ராயல் சேலஞ்சர்ஸ்

Published On 2017-04-29 14:50 GMT   |   Update On 2017-04-29 14:50 GMT
ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சொதப்பியது. புனே அணிக்கெதிராக 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். தொடரில் இன்றைய முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டிராவிட் ஹெட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹெட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் வழக்கம்போல் சொதப்ப ஆரம்பித்தனர். விராட் கோலி ஒருபக்கம் நிலையாக நிற்க, மறுபுறத்தில் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் இரட்டை இலக்க பந்துகளை சந்திக்கவில்லை. ஜாதவ் 12 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

டி வில்லியர்ஸ் (3), சச்சின் பேபி (2), ஸ்டூவர்ட் பின்னி (1), நெஹி (3), மில்னே (5), பத்ரி (2) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, விராட் கோலி 48 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அரவிந்த் (8), சாஹரல் (4) அவுட்டாகாமல் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றிற்கு செல்ல முடியும் என்ற நிலையில், பெங்களூரு அணி மீண்டும் சொதப்பி, வாய்ப்பை இழந்தது.
Tags:    

Similar News