செய்திகள்

3-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் வழங்கிய அஸ்வின், ஜடேஜா: வெற்றி ஆரூடம் கைகொடுக்குமா?

Published On 2017-03-17 10:29 GMT   |   Update On 2017-03-17 10:29 GMT
இந்திய மண்ணில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ள போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், தற்போதைய போட்டியிலும் அந்த ஆரூடம் பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மேக்ஸ்வெல் (104) தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.



முற்றி்லும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு மெச்சும் அளவில் இல்லை. இருவரும் தலா 30 ஓவர்களுக்கு மேல் வீசினார்கள். அதோடு தலா 100 ரன்களுக்கு மேல் வழங்கினார்கள்.

அஸ்வின் 34 ஓவர்கள் வீசி 114 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 வி்க்கெட் வீழ்த்தனார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். ஜடேஜா 49.3 ஓவர்கள் வீசி 124 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் 8 மெய்டன் அடங்கும்.



இதற்கு முன் இந்த ஜோடி இந்திய மண்ணில் இரண்டு முறை இதேபோல் தலா 100 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தற்போது 3-வது முறையாக இந்த ஜோடி தலா 100 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளது. பழைய இரண்டு போட்டியின் ஆரூடம் இந்த போட்டியிலும் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Similar News