செய்திகள்

ஹாங்காங் டி20 லீக்கில் 31 பந்தில் சதம் அடித்து அசத்திய வெயின் ஸ்மித்

Published On 2017-03-09 12:05 GMT   |   Update On 2017-03-09 12:05 GMT
ஹாங்காங் டி20 லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் ஸ்மித் 31 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஹாங்காங் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சிட்டி கைடாக் - கோவ்லூன் கேண்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சிட்டி கைடாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கோயட்செர் 57 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் அவுட்டாகாமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவ்லூன் கேண்டன்ஸ் அணியின் வெயின் ஸ்மித், பாபர் ஹயாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் ஓவரை நதீம் அஹமது வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 7-வது ஓவரை நதீன் அஹமது வீசினார். இந்த ஓவரில் வரிசையாக நான்கு சிக்சர்கள் தூக்கினார்.



தொடர்ந்து விளையாடிய அவர் 31-வது பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்தார். 31 பந்தில் 6 பவுண்டரி, 11 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். ஸ்மித் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் 14.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 204 ரன்கள் சேர்த்தது. இதனால் கோவ்லூன் கேண்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்மித் 40 பந்தில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 121 ரன்கள் குவித்தும், சாமுவேல்ஸ் 33 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன்கள் குவித்தும் அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.

ஐ.பி.எல. டி20 லீக்கில் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்தது சாதனையாக உள்ளது. ஸ்மித் 31 பந்தில் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

Similar News