செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 229 ரன் குவிப்பு

Published On 2017-03-08 13:28 IST   |   Update On 2017-03-08 13:28:00 IST
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எல்கர் சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் 229 ரன்கள் குவித்துள்ளது.
ட்யூனிடின்:

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ட்யூனிடின் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தொடக்கம் முதலே தடுமாறிய ஸ்டீபன் குக் 3 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அம்லா மற்றும் டுமினி இருவரும் 1 ரன்னில் ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன் எடுத்து திணறியது.



அடுத்து எல்கருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் அரை சதம் அடித்ததன்மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தி நிஷாம் பந்தில் ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் விளையாடிய எல்கர் சதம் அடித்தார்.

பின்னர் களமிறங்கிய பவுமா 101 பந்துக்களை சந்தித்து 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முதல் நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News