செய்திகள்

வித்தியாசமான முகபாவனையால் மிரட்டிய வீரர்கள்

Published On 2017-03-06 09:56 IST   |   Update On 2017-03-06 09:56:00 IST
நெருக்கடிக்கு மத்தியில் 2-வது நாளில் களம் புகுந்த இந்திய வீரர்கள் நேற்று களத்தில் ரொம்ப ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். இதனால் முறைப்பு, சீண்டல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்து 48 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

நெருக்கடிக்கு மத்தியில் 2-வது நாளில் களம் புகுந்த இந்திய வீரர்கள் நேற்று களத்தில் ரொம்ப ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். இதனால் முறைப்பு, சீண்டல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. ஸ்டீவன் சுமித் நேராக அடித்த பந்தை அஸ்வின் பிடிக்க முயன்ற போது, அதை தடுக்கும் விதமாக எதிர்முனையில் அசையாமல் நின்ற ரென்ஷா மீது மோதினார். இதை பார்த்த கோலி எரிச்சலுடன் அவரை நோக்கி ஏதோ சொன்னார். பிறகு நடுவரிடமும் புகார் கூறினார்.

இதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த்ஷர்மா, எதிரணி வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரது பந்தில் ஸ்டீவன் சுமித் தடுமாறிய போது, அவரை நோக்கி இஷாந்த் ஷர்மா வித்தியாசமான முகபாவனையுடன் உரத்த குரலில் கத்தியதை பார்க்க திகைப்பாக இருந்தது.



அதை கண்ட சுமித் உள்பட அனைவரும் சிரித்து விட்டனர். அடுத்த பந்தை எதிர்கொண்ட பிறகு சுமித்தும் அதே போன்று ஆக்ரோஷமான முக பாவனையை வெளிப்படுத்தினார். இதே பாணியில் ரென்ஷாவும் பதிலடி கொடுக்க தவறவில்லை.

கோலியுடனான வாக்குவாதம் குறித்து ரென்ஷா கூறுகையில், ‘அந்த சம்பவத்தின் போது என் அருகே ஓடி வந்த விராட் கோலி, புனே டெஸ்ட் போன்று மீண்டும் ஆட்டத்தின் பாதியிலேயே கழிவறைக்கு போக வேண்டியது தானே என்று கூறினார். அவர் இவ்வாறு சொன்னதை நான் வேடிக்கையாக எடுத்துக் கொண்டு சிரித்தேன்’ என்றார்.

Similar News