செய்திகள்

நடுவர்களால் அல்ல; சிறந்த ஆட்டத்தால் முதல் இடத்தில் உள்ளோம்- ஷினேடின் ஷிடேன்

Published On 2017-02-28 15:48 GMT   |   Update On 2017-02-28 15:48 GMT
சிறந்த ஆட்டத்தால் லா லிகா தொடரில் முதல் இடத்தில் உள்ளதாகவும் நடுவர்களால் அல்ல என்றும் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடரில் முக்கியமான லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அடித்தது. ஆகவே ஸ்கோர் 2-1 என இருந்தது.

அந்தவேளையில் வில்லாரியல் அணியின் புருனோ சோரியானோவின் கையில் பந்து பட்டதாக நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுத்து விட்டார். வில்லாரியல் அணியினர் எவ்வளவு போராடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இந்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். ஆகவே ஸ்கோர் 2-2 என சமநிலையடைந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என வெற்றி பெற்றது.



பெனால்டி வாய்ப்பு கொடுத்ததால் வில்லாரியல் அணியின் தலைவர் பெர்னாண்டோ ரொய்க், நடுவரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் அவருக்கு 1500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

நடுவரின் முடிவால்தான் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது என விமர்சனம் எழுந்துள்ளது. பார்சிலோனா 54 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 55 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதை பறைசாற்றும் வகையில் பார்சிலோனா அணியின் பின்கள வீரர் ஜெரார்டு பிக்யூ, ‘‘நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளால் ரியல் மாட்ரிட் கூடுதலாக 8 புள்ளிகள் பெற்றுள்ளது’’ என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு ரியல் மாட்ரிட் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் பதிலடி கொடுத்துள்ளார்.



விமர்சனம் குறித்து ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் கூறுகையில், ‘‘அவர்கள் விரும்புவது என்ன என்பது ஒவ்வொருவராலும் சொல்ல முடியும். ஆனால் அதில் உண்மை இல்லை. ஆடுகளத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவன் மூலம் நாங்கள் என்ன சாதிக்க விரும்புகிறமோ அதை பெறுகிறோம்.

ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் அவர்கள் நடுவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள். ரியல் மாட்ரிட் ஏற்கனவே தொழில்முறையாக விளையாடி வருகிறது. அதற்கு மரியாதை கொடுக்கிறது. நாம் பேச வேண்டும் என்றால், மைதானத்தில் செய்து காட்ட வேண்டும்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News