செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தோல்வியில் வருத்தமில்லை - ரபெல் நடால்

Published On 2017-01-30 03:57 GMT   |   Update On 2017-01-30 03:58 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இறுதி ஆட்டத்தில் பெடரர் என்னை விட ஒருபடி மேலே சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு அவர் தகுதியானவர் என்று ரபெல் நடால் பேட்டியளித்துள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 2 வார காலமாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர்கள் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடாலும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கினர்.

ரோஜர் பெடரர் 5 செட் வரை நீடித்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தோல்வி குறித்து ரபெல் நடால் அளித்த பேட்டி பின்வருமாறு:-

‘இன்றைய ஆட்டத்தில் உற்சாகமாக விளையாடினேன். தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. தோல்விக்காக நான், ரொம்ப வருத்தமுடன் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆஸ்திரேலிய ஓபனுக்காக கடினமாக உழைத்தேன். இந்த தொடரில் உலகின் மிகச்சிறந்த வீரர்களை வீழ்த்தினேன். ஒவ்வொருவருக்கு எதிராகவும் கடும் சவால் அளித்தேன். அது தான் எனக்கு முக்கியம். ஏனெனில் இது தான் தொடர்ந்து விளையாட நம்பிக்கையை கொடுக்கும். இந்த ஆட்டத்தில் பெடரர் என்னை விட ஒருபடி மேலே சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு அவர் தகுதியானவர்’. என்றார்.

Similar News