செய்திகள்

பவுன்சர் பந்து தாக்கியதில் வங்காளதேச அணி கேப்டன் படுகாயம்

Published On 2017-01-16 11:42 GMT   |   Update On 2017-01-16 11:42 GMT
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று வங்காளதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகீமின் தலையில் பவுன்சர் பந்து தாக்கியதில் காயமடைந்தார்.
வெலிங்டன்:

நியூசிலாந்து–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. விறுவிறுப்பான இப்போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் கடைசி நாளான இன்று வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியபோது, 43-வது ஓவரில் வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரகீம் காயமடைந்து வெளியேறினார். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டின் பின்பக்கமாக பட்டது. இதனால், அவரது தலையின் இடது பகுதியில் அடிபட்டது. நிலை குலைந்து மைதானத்தில் விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இரண்டாம் இன்னிங்சில் 53 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்திருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பயப்படும்படி அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். ஆனால், அடிபட்ட இடத்தில் வலி இருந்ததால், 2-ம் இன்னிங்சில் பீல்டிங் செய்ய வரவில்லை.

மைதானத்தில் முஷ்மிகுர் ரகீமிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது தமிம் இக்பால் உடனிருந்தார். முஷ்பிகுர் உடல்நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் நன்றாக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார்.

Similar News