செய்திகள்

ஐதராபாத் டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்

Published On 2017-01-09 05:21 GMT   |   Update On 2017-01-09 05:21 GMT
போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்தியா- வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது.
மும்பை:

வங்காளதேச கிரிக்கெட் அணி பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி பிப்ரவரி 8-ந்தேதி முதல் 12-ந் தேதிவரை ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. வங்காளதேசம் முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் ஆட இருப்பதால் மிகுந்த எதிர் பார்ப்புடன் அந்த அணி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஜான்மனோஜ் கூறும் போது, போதிய நிதி இல்லை என்பதை கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுப்படுத்தி விட்டோம். கிரிக்கெட் வாரியம் நிதி அளித்தால் மட்டுமே போட்டியை நடத்த இயலும். இதனால் போட்டியை நடத்துவதற்கான வழி இல்லை என்றார்.

டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று தெரிவித்துவிட்டதால் ஐதராபாத்தில் போட்டி நடப்பது சந்தேகமே. லோதா கமிட்டி பரிந்துரையில் கிரிக்கெட் வாரியம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில சங்கத்துக்கு நிதி வழங்க இயலாத சூழ்நிலையில் உள்ளது.

எனவே இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. எந்த இடம் என்பது பற்றி கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை.

இதற்கிடையே இந்தியா- இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டியை சென்னையில் நடத்த இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூனியர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு போட்டிகள் இருப்பதால் தங்களால் நடத்த இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Similar News