செய்திகள்

சென்னை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 284/4

Published On 2016-12-16 11:56 GMT   |   Update On 2016-12-16 11:57 GMT
மொயீன் அலி சதத்தால் சென்னை டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கும் முன் மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வீரர்கள் தங்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினார்கள்.

இங்கிலாந்து அணியின் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜென்னிங்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். அவர் வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் குக் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா இந்த தொடரில் குக்கை ஐந்தாவது முறையாக வீழ்த்தி சாதனைப் படைத்தார். குக் 2 ரன்கள் எடுத்திருந்தபோது 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.



இங்கிலாந்து அணி 21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். இவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் அவட்டாகி அரைசதம் வாய்ப்பை இழந்தார். ஆனால், மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி சதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது 2-வது சதமாகும். பேர்ஸ்டோவ் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் மொயீன் அலி உடன் இணைந்து மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.



இதனால் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Similar News