செய்திகள்

இங்கிலாந்து வீரர் ஹமீத் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்

Published On 2016-11-29 12:10 GMT   |   Update On 2016-11-29 12:10 GMT
19 வயதே ஆன இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆல் அவுட் அனது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஹசீப் ஹமீத். 19 வயதே ஆன இவர் இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது. ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான அவர் அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2-வத இன்னிங்சில் 82 ரன்களும் சேர்த்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 13 ரன்னும், 25 ரன்னும் எடுத்தார்.

மொகாலி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் வீசிய பந்து ஹமீத்தின் இடது கை சுண்டு விரலில் பட்டு ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுண்டு விரலில் பந்து வேகமாக பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. 8-வது வீரரா களம் இறங்கிய அவர் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அவரது காயத்தின் தன்மை வீரியம் உள்ளதாக இருப்பதால் இங்கிலாந்து அணி அவரை சிகிச்சைக்காக உடனடியாக இங்கிலாந்து அனுப்புகிறது. இதனால் இந்தியாவிற்கு எதிராக மும்பை மற்றும் சென்னையில் நடக்க இருக்கம் எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி புதிய தொடக்க வீரரை தேடவேண்டியுள்ளது.

Similar News