செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை: ஐ.சி.சி. முடிவுக்கு பாகிஸ்தான் வரவேற்பு

Published On 2016-11-24 08:15 GMT   |   Update On 2016-11-24 08:16 GMT
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுத்த ஐ.சி.சி.யின் இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்றுள்ளது.
கராச்சி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அட்டவணைப்படி பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடி இருக்க வேண்டும்.

ஆனால் இருநாடுகள் இடையேயான பிரச்சினை காரணமாக இந்திய மகளிர் அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய மகளிர் அணி மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்து உள்ளது.

பாகிஸ்தானுக்கு 6 புள்ளிகளை வழங்கியதோடு அந்த அணி தொடரையும் கைப்பற்றியதாக அறிவித்தது. இதனால் இந்திய அணிக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கண்டனம் தெரிவித்து உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதற்கிடையே ஐ.சி.சி.யின் இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த அக்டோபரில் இருந்து இந்திய மகளிர் அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்து வருகிறது. இதற்காக ஐ.சி.சி. எடுத்த முடிவு வரவேற்கதகக்கது. ஐ.சி.சி. தொழில் நுட்பக்குழு 6 புள்ளிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.

இந்த புள்ளிகள் உலககோப்பை போட்டிக்கு நுழைய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு உதவியாக அமையும். இந்திய அணி விளையாட மறுப்பது பற்றி நாங்கள் விரிவான தகவல்களை ஐ.சி.சி.யிடம் சமர்ப்பித்தோம். இது தொடர்பாக ஐ.சி.சி.தொழில் நுட்ப விசாரணை செய்து பாகிஸ்தானுக்கு புள்ளிகளை வழங்கியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News