செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: ரகானேவுக்கு பின்னடைவு

Published On 2016-11-15 05:07 GMT   |   Update On 2016-11-15 05:07 GMT
டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரகானேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்டிங் வரிசையில் இந்திய வீரர் ரகானேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ‘டாப் 10’ வரிசையில் இடம் பெற்று இருந்த ஒரே இந்தியரான அவர் 4 இடங்களில் பின்தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்பு அவர் 5-வது இடத்தில் இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரகானே முதல் இன்னிங்சில் 13 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். இந்த மோசமான ஆட்டம் காரணமாக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா, முரளி விஜய் ஆகியோர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர். புஜாரா 11-வது இடத்திலும், முரளி விஜய் 23-வது இடத்திலும் உள்ளனர். கேப்டன் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். ஜோரூட் (இங்கிலாந்து) 2-வது இடத்திலும், வில்லியம்சன் (நியூசிலாந்து) 3-வது இடத்திலும் உள்ளனர்.

யூனிஸ்கான் (பாகிஸ்தான்), ஹசிம் அம்லா, டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) வார்னர், ஆடம் வோக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 881 ரேட்டிங் புள்ளியில் உள்ளார். மற்றொரு சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா 809 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

ஹெராத் (இலங்கை) 2-வது இடத்திலும், ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) 3-வது இடத்திலும் உள்ளனர்.

Similar News