செய்திகள்

நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள்: மல்யுத்த வீரர் நர்சிங்

Published On 2016-08-20 06:24 IST   |   Update On 2016-08-20 07:01:00 IST
நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
ரியோ:

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.

இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.

இதனையடுத்து, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நர்சிங் கூறியதாவது:

என்னுடைய பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த தடை இந்தியா மீதான கறை ஆகும்.

நீதியுடன் திரும்பாவிட்டால், என்னை தூக்கில் தொங்க அனுமதியுங்கள், இதனை நான் உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன்.

இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். உண்மை வெளிவர வேண்டும். தேவையென்றால் சிபிஐ விசாரணை நடத்துங்கள். நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் இடுங்கள். அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், விளையாட்டின் எதிர்காலம் இருண்டதாகி விடும். விளையாட்டில் இணைந்து இந்தியாவிற்காக பதக்கம் வாங்க வேண்டும் என்று நிறைய பேர் உற்சாகப் படுத்தப்படமாட்டார்கள். நம்மை நாமே குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News