செய்திகள்

மல்யுத்தத்தில் பெண்கள் ஈடுபட எதிர்ப்பு: தடைகளை வெற்றிபடிக்கட்டாக மாற்றிய சாக்‌ஷி மாலிக்

Published On 2016-08-19 09:53 IST   |   Update On 2016-08-19 09:53:00 IST
பெண் குழந்தைகள் குறைவாக உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து உருவாகிய மல்யுத்த முத்து தான், இந்த சாக்‌ஷி மாலிக்.
பாலின விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் அரியானாவும் ஒன்று. அதாவது இங்கு ஆயிரம் ஆண்களுக்கு, 900 பெண்களே இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் குறைவாக உள்ள அந்த மாநிலத்தில் இருந்து உருவாகிய மல்யுத்த முத்து தான், இந்த சாக்‌ஷி மாலிக்.

ரோட்டாகில் சாக்‌ஷியின் வீடு இப்போது ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று திருவிழா போல் களை கட்டியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். பரவசப்படும் சாக்‌ஷியின் தந்தை சுக்பிர், தாயார் சுதேஷ் எல்லையில்லாத பூரிப்பில் மிதக்கிறார்கள். ஆனந்த கண்ணீரும் எட்டிப்பார்க்கிறது. உறவினர்களும், நண்பர்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள். இத்தகைய பேரானந்தத்தை ஒரே நாளில் கொண்டு வந்து விட்ட சாக்‌ஷி மாலிக் கடந்து வந்த பாதை சற்று கடினமானது தான்.

சாக்‌ஷியின் தாத்தா ஒரு மல்யுத்த வீரர். அதன் தாக்கம் அப்படியே சாக்‌ஷியிடம் ஒட்டிக்கொண்டது. 12-வது வயதில் மல்யுத்த பயிற்சியை ஆரம்பித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம் வென்றவரான சுஷில்குமார் தான் அவரது முன்மாதிரி. ஆனால் அரியானாவில் அந்த சமயத்தில் பெண்கள் மல்யுத்தத்தில் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. சாக்‌ஷியின் உறவினர்களும், இது ‘ஆண்களுக்குரிய விளையாட்டு, இப்படியே விட்டால் அவளது வாழ்க்கை பாழாகி விடும்’ என்று சகட்டு மேனிக்கு தூபம் போட்டனர். ஆனாலும் மல்யுத்தத்தை உயிர்மூச்சாக நினைத்த சாக்‌ஷி அதை விடுவதாக இல்லை. மகளின் விருப்பத்துக்கு தடை ஏதும் சொல்லாத அவரது பெற்றோர் எல்லா வகையிலும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

எதிர்ப்புக்கு இடையே 2002-ம் ஆண்டு ஈஸ்வர் தாஹியா என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்த சாக்‌ஷி, அங்குள்ள சோட்டு ராம் ஸ்டேடியத்தில் ஆண்களுடன் இணைந்து பயிற்சி களத்தில் ஈடுபட்டு தன்னை மெருகேற்றினார். பயிற்சிக்கு வீராங்கனையை அனுமதித்ததால், தாஹியாவுக்கு எதிராக உள்ளூர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இப்படி பல்வேறு தடைக்கற்களை கடந்த சாக்‌ஷி மாலிக் 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2015-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றார். ஒலிம்பிக் போட்டிக்கு புறப்படும் முன்பு, ‘நிச்சயம் பதக்கத்துடன் வருவேன்’ என்று பெற்றோருக்கு அளித்த வாக்குறுதியை பெரும்பாடு பட்டு காப்பாற்றி விட்டார். மல்யுத்தத்தில் பெண்களும் ராணியாக வலம் வரலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

“சிறு வயதில், ஒலிம்பிக் போட்டி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. அப்போது விளையாட்டு வீராங்கனையாக மாறி, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. ஏனெனில் இந்திய பிரதிநிதியாக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றால் விமானத்தில் பறக்க முடியுமே” என்று கடந்த கால நினைவுகளை அசைப்பட்ட சாக்‌ஷி மாலிக், இனி அடிக்கடி விமானத்தில் பறந்து கொண்டே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Similar News