செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களுக்கு விராட் கோலி ஆதரவு: விமர்சனம் மனதை புண்படுத்தும் என்கிறார்

Published On 2016-08-14 18:32 IST   |   Update On 2016-08-14 18:32:00 IST
இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க தவறி வருவதால் விமர்சனம் எழுந்த வருகிறது. ஆனால், வீரர்களுக்கு ஆதரவாக விராட் கோலி குரல் கொடுத்துள்ளார்.
விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒவ்வொரு இந்திய வீரர்களும் தன்னைத்தானே தயார் செய்வதற்காக உயிரையே கொடுக்கும் அளவிற்கு உழைக்கிறார்கள். சிலர் அதை கண்டு கொள்வதில்லை. இது அவர்களை மிகவும் புண்படுத்துவதாக நினைக்கிறேன். கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது. அதேபோல் ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெற முடியாது.

ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு 100 சதவீதம் உழைப்பை கொடுக்கிறார்கள். ஆனால் சில வீரர்களுக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் வசதிகளில் 10 சதவீதம் கூட கிடைப்பதில்லை. ஆனால், சிலர் உட்கார்ந்து கொண்டு மற்ற நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

யாராவது ஒருவர் வெற்றி பெற்றால் இதுதான் முக்கியம். வசதி இல்லாத நேரத்தில் பதக்கம் பெற்றால் பெரிய விஷயமாக தோன்றும். சரியான வசதி கிடைக்காமலும் வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம் நாட்டிற்காக பதக்கம் வாங்க முயற்சி செய்கிறார்கள்.

இனிமேல் இருக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் நேர்மறையான எண்ணத்துடன் செல்ல வேண்டும். கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் சென்று விளையாடியதற்கு அவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். வசதிகள் சரியாக கிடைக்காத நிலையிலும் நாட்டிற்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார்கள். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Similar News