செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: மைக்கேல் பெல்ப்சுக்கு 4-வது தங்கம்

Published On 2016-08-12 13:23 IST   |   Update On 2016-08-12 13:23:00 IST
நள்ளிரவு நடந்த நீச்சல் ஆண்கள் தனிநபர் 200 மீட்டர் மெட்லே பிரிவில் பங்கேற்ற மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் நான்கு கைப்பற்றி உள்ளார்.
ரியோ டி ஜெனிரோ:

அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க வேட்டை மன்னனாக திகழ்கிறார். ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன் அவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக திகழ்ந்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 4x100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு, 4x200 மீட்டர் தொடர் பிரிஸ்டைலிலும் தங்கம் வென்றார். இதுவரை அவர் 3 தங்கம் வென்று இருந்தார்.

நள்ளிரவு நடந்த நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 4-வது தங்கம் வென்றார். ஆண்கள் தனிநபர் 200 மீட்டர் மெட்லே பிரிவில் பங்கேற்ற அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 54.66 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வெள்ளி பதக்கத்தை ஜப்பான் வீரர் ஹகினோ கோசூகேவும் (1 நிமிடம் 56.6 வினாடி), வெண்கல பதக்கத்தை ‌ஷன் வாங்கும் (1 நிமிடம் 57.05 வினாடி) வென்றனர்.

மைக்கேல் பெல்ப்ஸ் தான் பங்கேற்ற 4 போட்டியிலும் தங்கம் வென்று அசத்தி உள்ளார். இன்னும் அவருக்கு ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. இதிலும் அவர் வெற்றி பெற்றால் தங்கப் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயரும்.

ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் 22-வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் 26 பதக்கம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார்.

பெல்ப்ஸ் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும், தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கமும் ஆக மொத்தம் 22 தங்கம் வென்றுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளியும், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலமும் பெற்றுள்ளார். பெல்ப்ஸ் 22 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 26 பதக்கங்களை வென்று உள்ளார்.

Similar News