செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் ஜூவாலா கட்டா- அஸ்வின் பொன்னப்பா ஜோடி தோல்வி

Published On 2016-08-11 17:49 IST   |   Update On 2016-08-11 17:49:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியடைந்தது.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் இன்று பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டது.

ஜப்பான் ஜோடிக்கு ஈடுகொடுக்க ஜூவாலா- பொன்னப்பா ஜோடி திணறியது. முதல் செட்டில் இந்திய ஜோடி 4-1 என முன்னிலையில் இருந்தது. அதன்பின் ஜப்பான் ஜோடி 7-5 என முன்னிலை பெற்றது. அதன்பின் 11-8 என பின்தங்கியது. ஒரு கட்டத்தில் 14-17 என இந்திய ஜோடி பின்தங்கியிருந்தது. அதன்பின் இந்திய ஜோடியால் முன்னேறி வர முடியவில்லை. இதனால் இந்த செட்டை 15-21 என இழந்தது.

2-வது செட்டிலும் இந்திய ஜோடியால் முன்னிலை வகிக்க முடியவில்லை. தொடக்கத்திலேயே ஜப்பான் ஜோடி 5-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் 10-6 என முன்னிலை பெற்றது. அதன்பின் 18-10 என வலுவான முன்னிலைக்கு சென்றது.

அதன்பின்னர் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று ஜப்பான் ஜோடி 21-10 என 2-வது செட்டையும் கைப்பற்றியது.

இதனால் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-21, 10-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இனி நாளை நெதர்லாந்து ஜோடியையும், நாளை மறுநாள் தாய்லாந்து அணியையும் இந்திய ஜோடி எதிர்கொள்கிறது. 

Similar News