செய்திகள்

பெண்கள் வில்வித்தையில் தீபிகாகுமாரி முன்னேற்றம்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

Published On 2016-08-11 11:06 IST   |   Update On 2016-08-11 11:06:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் நள்ளிரவு நடந்த பெண்கள் ரிசர்வ் தனிநபர் வில்வித்தை போட்டியில் தீபிகாகுமாரி சிறப்பாக செயல்பட்டு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ரியோ டி ஜெனிரோ:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி, பாம்யலாதேவி, லட்சுமி ராணி ஆகிய 3 வீராங்கனைகளும், அதானுதாஸ் என்கிற வீரரும் ஆக மொத்தம் 4 பேர் பங்கேற்றனர்.

இதன் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கால் இறுதியில் 4-5 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோற்றது. ஆண்கள் தனி நபர் பிரிவில் அதானுதாஸ் சிறப்பாக செயல்பட்டு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருந்தார். அவர் இந்த சுற்றில் தென்கொரிய வீரரை நாளை சந்திக்கிறார்.

நள்ளிரவு நடந்த பெண்கள் ரிசர்வ் தனிநபர் வில்வித்தை போட்டியில் தீபிகாகுமாரி சிறப்பாக செயல்பட்டு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

தீபிகாகுமாரி முதல் சுற்றில் ஜார்ஜியாவை சேர்ந்த கிறிஸ்டின் கெபுவாவை சந்தித்தார். தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் தீபிகாகுமாரி 6-4 என்ற கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார்.

தீபிகா முதல் செட்டை 27-26 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 30-27 என்ற கணக்கிலும், வென்றார். கெபா 4-வது செட்டை 29-27 என்ற கணக்கில் வென்றார். 2-வது செட் 29-29 என்ற கணக்கிலும் 5-வது செட் 29-29 என்ற கணக்கிலும் சமன் ஆனது.

தீபிகா குமாரி 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த குனிடாலினா சரோடரியை சந்தித்தார். இதில் தீபிகா 6-2 என்ற கணக்கில் வென்றார். முதல் செட்டை தீபிகா 24-27 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டை 29-26 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 28-26 என்ற கணக்கிலும், 4-வது செட்டை 28-27 என்ற கணக்கிலும் தீபிகா வென்றார்.

தீபிகா குமாரி கால்இறுதிக்கு முந்தைய சற்றில் சீனதைபே வீராங்கனை டான்-யா-டிங்கை இன்று சந்திக்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

இதேபோல மற்றொரு இந்திய வீராங்கனையான பாம்யலாதேவியும் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார். அவர் மெக்சிகோ வீராங்கனை வாலன்சியாவை இந்திய நேரப்படி மாலை 5.56 மணிக்கு சந்திக்கிறார்.

Similar News