செய்திகள்
தங்கப்பதக்கத்துடன் ஹங்கேரி நீச்சல் வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ.

இரும்பு பெண்மணி கதின்கா ஹோஸ்ஜூக்கு 3-வது தங்கம்

Published On 2016-08-11 07:54 IST   |   Update On 2016-08-11 07:54:00 IST
ஒலிம்பிக் நீச்சலில் பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ரியோ டி ஜெனீரோ :

ஒலிம்பிக் நீச்சலில் பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ 2 நிமிடம் 06.58 வினாடிகளில் இலக்கை கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஒலிம்பிக்கில் அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரிப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 400 மீட்டர் தனிநபர் மெட்லே மற்றும் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவுகளிலும் தங்கத்தை வென்று இருந்தார்.

‘இரும்பு பெண்மணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 27 வயதான கதின்கா, வெற்றிக்கு தனது கணவரும், பயிற்சியாளருமான ஷேன் துசுப்பின் ஊக்கமும் முக்கியம் காரணம் என்கிறார். ‘ஒரு பயிற்சியாளராக அவர் மிகவும் கண்டிப்பானவர். மிகவும் உணர்ச்சி வசப்படுவார். ஆனால் வீட்டில் பழகுவதற்கு இனிமையானவர். ஜாலியாக இருப்பார்’ என்றார்.

மேலும் அவர் கூறும் போது, ‘இங்கு வருவதற்கு முன்பாக மூன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் வெல்லவில்லை. அதனால் ரியோவில் ஏதாவது பதக்கம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் வந்தேன். ஆனால் மூன்று தங்கம் வென்றதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.

கதின்கா இன்னும் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் நீச்சலடிக்க இருக்கிறார். இதிலும் தங்கம் வென்றால், ஒரு ஒலிம்பிக்கில் நீச்சலில் பெண்கள் தனிநபர் பிரிவில் அதிக தங்கம் வென்ற கிழக்கு ஜெர்மனி வீராங்கனை கிரிஸ்டின் ஒட்டோவின் (1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்) சாதனையை சமன் செய்வார்.

Similar News