செய்திகள்

இன்று 2 போட்டியில் வெற்றி: பெல்ப்ஸ் 21 தங்கம் வென்று சாதனை

Published On 2016-08-10 12:49 IST   |   Update On 2016-08-10 12:49:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடந்த நீச்சல் பந்தயத்தில் பெல்ப்ஸ் மேலும் 2 தங்கம் வென்றார். இதன்மூலம் அவரது தங்கம் வேட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரியோ டி ஜெனிரோ:

ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான அவர் ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பே ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக திகழ்ந்தார்.

மைக்கேல் பெல்ப்ஸ் நேற்று முன்தினம் நடந்த 4x100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் வென்றார். இதனால் அவரது தங்க எண்ணிக்கை 19 ஆகவும், மொத்த பதக்கம் 23 ஆகவும் உயர்ந்து இருந்தது.

இந்த நிலையில் இன்று நடந்த நீச்சல் பந்தயத்தில் பெல்ப்ஸ் மேலும் 2 தங்கம் வென்றார். 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அவர் 1 நிமிடம் 53.40 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து நடந்த 4x200 மீட்டர் தொடர் பிரிஸ்டைலிலும் தங்கம் வென்றார். சோனர் டையர், டவுன்லி, ஹாஸ், ரியான் லாச்செட் மைக்கேல் பெல்ப்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பந்தய தூரத்தை 7 நிமிடம் 00.66 வினாடியில் கடந்தது.

இன்று பெற்ற 2 தங்கம் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் 25 பதக்கம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார். அவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார்.



பெல்ப்ஸ் 2004 ஏதெனஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும், தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கமும் ஆக மொத்தம் 21 தங்கம் வென்றுள்ளார்.

அவர் லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளியும், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலமும் பெற்றுள்ளார். பெல்ப்ஸ் 21 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 25 பதக்கங்களை வென்று சாதனை புரிந்து இருக்கிறார்.

பெல்ப்சுக்கு இந்த ஒலிம்பிக் இன்னும் 2 பந்தயம் (4x100 மீட்டர் மெட்லி, 200 மீட்டர் தனிநபர் மெட்லி) இருக்கிறது. இதிலும் வெற்றி பெற்றால் அவரது தங்கம் எண்ணிக்கை மேலும் உயரும்.

Similar News