செய்திகள்

தனிநபர் வில்வித்தையில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்த அதானு தாஸ்

Published On 2016-08-10 09:17 IST   |   Update On 2016-08-10 09:17:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் அதானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பஹதுர் முக்தானை எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட அதானு தாஸ் 6-0 என்ற புள்ளி கணக்கில் பஹதுருவை பந்தாடினார். கடைசி கேமில் மட்டும் அதானு மூன்று முறை துல்லியமாக 10 புள்ளிகளை குவித்து பிரமாதப்படுத்தினார்.

இதன் பின்னர் அடுத்த சுற்றில் அதானு தாஸ், அட்ரியன் ஆன்ட்ரஸ் புயன்டெஸ் பெரேசை (கியூபா) சந்தித்தார். இதில் கடும் சவால்களை எதிர்கொண்ட போதிலும் தடைகளை வெற்றிகரமாக கடந்த அதானு தாஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் அட்ரியனை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான அதானு தாஸ் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய வீரர் லீ செங் யுனுடன் மோதுகிறார். லீ செங் யுன், ரிகர்வ் அணிப்பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

Similar News