செய்திகள்

இதய நோயால் இலங்கை வீரர் எரங்கா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி

Published On 2016-06-19 15:53 IST   |   Update On 2016-06-19 15:53:00 IST
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமோந்தா எரங்கா. இவர் இதய நோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஏற்கனவே முடிந்து விட்டது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது.

ஒருநாள் தொடருக்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மோதியது. நேற்று அயர்லாந்தில் உள்ள டப்பின் நகரில் 2-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமோந்தா எரங்காவும் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் எரங்கா இதய நோய் காரணமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழுவிவரம் ஏதும் தெரிவிக்கவில்லை.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிராசத் மற்றும் சமீரா ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்கள். அப்போது எரங்காதான் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் 2-வது டெஸ்டில் பந்து வீசும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனால் நாளை அவர் லாக்பரோக் யுனிவர்சிட்டியில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த இருந்தார்.

29 வயதாகும் எரங்கா இலங்கை அணிக்காக தலா 19 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 57 விக்கெட்டுக்கள் வீழத்தியுள்ளார்.

Similar News