சிறப்புக் கட்டுரைகள்

நாளை வெற்றிகளை அள்ளித்தரும் விஜய ஏகாதசி

Published On 2024-03-05 12:15 GMT   |   Update On 2024-03-05 12:15 GMT
  • மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர்.
  • விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது.

விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும், ஒரு தனிப்பட்ட பெயரும் தனிச்சிறப்பும் உண்டு.

மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்று பெயர். நாளை (புதன்கிழமை) விஜய ஏகாதசி தினமாகும். இந்த விஜய ஏகாதசிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. குறிப்பாக இந்த ஏகாதசி விரதத்தை நாளை கடைபிடிப்பதால், மனம் தூய்மை அடைகிறது.

ஏகாதசி விரதம் எவ்வளவு கடினமானதோ, அவ்வளவு பலன் தரும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 12 ஏகாதசிகளில் விரதம் இருப்பது பல நூறு அஸ்வமேத யாகங்களும், கங்கையில் பல முறை புனித நீராடியதற்கு சமமான பலனையும் தரக் கூடியது என புராணங்கள் சொல்கின்றன.

மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சனாதன தர்மத்தின் படி, ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் வருகின்றன, அவற்றில் நாளை வரும் விஜய ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இந்த ஏகாதசி விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விரதத்தை அனுசரிக்கும் நபர்கள் நாள் முழுவதும் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும், இதனால் அவர்கள் ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள்.

விஜய ஏகாதசி நாளை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை முடிவடைகிறது. இந்த விரதத்தின் பரணை பிற்பகல் 1.43 மணி முதல் மாலை 4.04 மணி வரை செய்யப்படும்.

ஏகாதசி விரதம் முடிவடையும் போது அது பரணா எனப்படும். பொதுவாக எல்லா விரதங்களும் ஒரே நாளில் மாலை/இரவில் ஏதாவது சாத்வீக உணவுகளை சாப்பிட்டு முடிக்கப்படும், ஆனால் ஏகாதசியின் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகும், சூரியன் மறைவதற்கு முன்பும் விரதம் இருக்க வேண்டும். அதாவது வழக்கமான உணவை உண்பதன் மூலம் விரதத்தை முடிக்க வேண்டும்.

துவாதசி திதிக்குள் பரணத்தைச் செய்யாமல் இருப்பது பாவத்திற்குச் சமம் என்பது நம்பிக்கை. கூடுதலாக, நோன்பு திறக்கும் போது, ஒருவர் தியானம் செய்ய வேண்டும். அல்லது விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க வேண்டும். விஜய ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணிய மானதாக கருதப்படுகிறது. மேலும், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அருளைப் பெற, முழுமையான சடங்குகளைப் பின்பற்றி விஜய ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விஜயம் என்றால் வெற்றி என்று அர்த்தம். கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதீகம்.

வினைப்பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள்.

ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன. ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய முறைமைகளையும் உருவாக்கினர்..

சிவனை வழிபடுபவர்களுக்கு பிரதோஷமும், முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களுக்கு சஷ்டியும், விநாயகரைத் தொழுதுகொள்பவர்களுக்கு சதுர்த்தியையும் விசேஷ தினங்களாக வகுத்தனர். அதேபோன்று விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும்.

ராமர் மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.

ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உபவாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் நாளை கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

விஜய ஏகாதசிக்கு அப்படி என்ன சிறப்பு?

ஜனக மகாராஜா, தனது மகள் ஜானகிக்கு சரியான கணவனை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்தார். தெய்வ அம்சம் பொருந்திய தனது மகளுக்கு யாரை மணமகனாக தேர்வு செய்வது என யோசித்த அவர், மகா விஷ்ணுவிடமே இதற்கு வழி கேட்கலாம் என முடிவு செய்து, யாகம் ஒன்றை நடத்தினார்.

அந்த யாகத்தின் பயனாக ஜனகரின் முன் தோன்றிய மகா விஷ்ணு, விஜய ஏகாதசி நாளில் உனது அரண்மனை வாசலை தேடி வரும் ஒருவனுக்கு உனது மகளை திருமணம் செய்து கொடு என கூறினார்.

விஜய ஏகாதசி நாளுக்காக ஜனக மகாராஜாவும் காத்திருந்தார். அந்த நாளில் அரண்மனை வாசலுக்கு மிதிலையின் இளவரசன் ஸ்ரீ ராமரே வந்தார். அவருக்கு ஜனகர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

அதனால் விஜய ஏகாதசி தினம் வெற்றிக்குரிய நாளாகவும், நினைத்தவற்றை நிறைவேற்றி தரும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் தான் ஸ்ரீராமர், அரக்கர்களை அழித்து வெற்றி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருந்து, மகா விஷ்ணு திருநாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். பகவத்கீதை புராணத்தை படிக்கலாம். மகாவிஷ்ணுவை போற்றும் பாடல்களை பாட வேண்டும்.

என்ன பலன் கிடைக்கும்?

விஜய ஏகாதசி விரதம் இருப்பவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம், வளமான வாழ்வு ஆகியவை கிடைக்கும். பிறப்பு, இறப்பு இல்லாத நிலையை அளிப்பதுடன், மோட்சத்தையும் கொடுக்கும்.

விஜய ஏகாதசி அன்று, விரதம் இருப்பதன் மூலம், வாழ்க்கையில் செல்வ வளம் வெற்றி, நிம்மதி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் என அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழலாம்.

கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகிய அனைத்தும் நீங்கி மனதில் நிம்மதியான உணர்வு ஏற்படும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடையலாம்.

என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

"ஓம் நமோ நாராயணா"

இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத்தரும்.

Tags:    

Similar News