சிறப்புக் கட்டுரைகள்
null

பிரமிக்கும் அதிசயத்தைக் கொண்ட எகிப்து!- 15

Published On 2022-06-28 09:50 GMT   |   Update On 2022-06-28 09:56 GMT
  • உலகின் பழைய நாகரிகங்களுள் ஒன்றான நைல் நதி நாகரிகத்தைக் கொண்ட எகிப்து மிக மிகப் பழமையான வரலாறைக் கொண்ட நாடாகும்.
  • பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றைக்கொண்டு அனைவரையும் ஈர்க்கும் நாடு எகிப்து. ஆம், இங்கு தான் கிரேட் பிரமிட் உள்ளது.

மாபெரும் வீரனான நெப்போலியன் பிரமிடின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான். ஆவல் உந்த அவன் கிரேட் பிரமிட் எனப்படும் பெரிய பிரமிடை அடைந்தான். அதன் முக்கிய உள்ளறையில் பல வருடங்கள் பயிற்சி பெற்ற சீடர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் தியானம் மற்றும் ரகசிய சித்திகளில் பயிற்சி பெறுபவர் அந்த உள்ளறையில் ஒரு இரவு முழுவதும் தங்கி இருந்து உள்ளொளி பெறுவர் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான்.

அற்புதமான நுணுக்கமான கணிதம் மூலம், இடம், திசை, ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றைப் பரிசீலித்து அமைக்கப்பட்டிருக்கும் அந்த அறை பிரமாதமான 'சக்தி கேந்திரம்' என்று அறிந்திருந்த அவன் அந்த அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கினான்.

மறுநாள் காலை அதிசயம் மற்றும் ஆச்சரியத்தைக் காட்டும் முகத்துடன் வெளியே வந்த அவனை நோக்கி, "என்ன நடந்தது" என்று அனைவரும் கேட்டனர். தனது சக்தி மயமான அனுபவங்களை வெளியே சொல்லத் தயங்கிய அவன், நான் நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்' – என்றான். ஆம், நம்ப முடியாத அதிசயங்களைத் தருவது பிரமிட்!

எகிப்து நாடு

பத்து கோடியே எழுபத்தாறு லட்சம் ஜனத்தொகையைக் கொண்ட எகிப்து நாட்டின் பரப்பளவு 3,90 121 சதுர மைல்களாகும். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தென்மேற்கு ஆசியா வரை பரந்துள்ள நாடு இது.

உலகின் பழைய நாகரிகங்களுள் ஒன்றான நைல் நதி நாகரிகத்தைக் கொண்ட எகிப்து மிக மிகப் பழமையான வரலாறைக் கொண்ட நாடாகும்.

எண்ணெய் வளமும் இயற்கை வாயுவையும் கொண்டுள்ள எகிப்து ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நாடாகும்.

பெரிய பிரமிட் மர்மம்!

'கிரேட் பிரமிட்' என்று அழைக்கப்படும் பெரிய பிரமிட் 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பின் மேல் மட்டம் அதிசயப்படும் அளவு சமதளமாக இருக்கிறது.

23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது பிரமிட்! அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 50 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இடம் மயிரிழை அளவு கூட இடைவெளி இன்றி செய்யப்பட்டுள்ளது! இந்த பிரமிடில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற்களைக் கொண்டு அமெரிக்காவின் வானளாவிய கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல 30 கட்டிடங்களைக் கட்டலாம்!

இது மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கும் பிரமிடுக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது.

பிரமிட், பூமியின் ஸ்கேல் மாடலாக இருப்பது ஒரு வியப்பூட்டும் விஷயம்! அதனுடைய லாடிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் ஆகிய இரண்டும் வெட்டிக்கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமிப்பரப்பின் வழியே செல்கிறது என்பது ஒரு அதிசயமான விஷயம்!

பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே ஜீடா ஒரியன் நட்சத்திரத்தையும் ஆல்பா டிராகோனிஸ் நட்சத்திரத்தையும் காண்பிக்கின்றன. குவீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் சிரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன. நமது புராணங்கள் பெரிதும் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரமே சிரியஸ்! இது பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது.

பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

போவிஸ் என்ற பிரெஞ்சுக்காரர் பிரமிடைப் பார்க்கச் சென்றபோது பூனைகளும் மற்ற சிறு மிருகங்களும் வழி தவறி ஆங்காங்கே செத்து கிடப்பதைப் பார்த்தார். மீண்டும் பல மணி நேரம் கழித்து தான் வந்த வழியில் திரும்புகையில் அவை அழுகி நாற்றம் எடுக்காமல் இருந்ததைப் பார்த்து வியந்தார். உடனே பிரமிடின் ஸ்கேல் மாடலைத் தயார் செய்து அதில் பல்வேறு பதார்த்தங்களை வைத்துச் சோதனை செய்தார். அவை கெடவே இல்லை.

தொடர்ந்து செக்கோஸ்லே கியாவைச் சேர்ந்த காரெல் டின்பெல் என்ற ரேடியோ என்ஜினீயர் பிரமிடின் சிறிய ஸ்கேல் மாடலில் ஒரு பிளேடைத் தெற்கு வடக்காக காம்பஸின் உதவி கொண்டு வைத்தார். பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருந்தன. இதை பிரமிடின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் இருக்குமாறு வைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பிளேடின் மழுங்கிய முனைகள் கூர்மையுடையதாக ஆகியிருந்தன.

அமெரிக்க டாலர் மர்மம்!

இது ஒருபுறமிருக்க, உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் மறைமுக ஆற்றலைக் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதில் உள்ள பிரமிடே! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் எப்போதும் அமெரிக்கா வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிரமிடின் மேலே உள்ள எதையும் ஊடுருவும் கண் அமெரிக்காவிற்கு தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரமிடைத் தன் டாலரில் கொண்டுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்கும். என்றும் செல்வச் செழிப்பில் திகழும்!

பிரமிட் டூர்

பிரமிட் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய உதவுவது பிரமிட் டூர். குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் என்பதில் ஆரம்பித்து சில நாட்கள் வரை இருந்து பார்த்து அறிய வேண்டிய அதிசயம் பிரமிட் என்பதால் தகுந்த ஒரு திட்டத்துடன் எகிப்து பயணத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

கிஜா மற்றும் குபு பிரமிடின் உள்ளேயே செல்லலாம். ஒட்டகம் அல்லது குதிரை சவாரி இதற்கென உண்டு. நடந்து சென்றும் பார்க்கலாம்.

அடுத்து எகிப்து மியூசியம்,மெம்பிஸ், சகாரா என்ற பல இடங்களையும் பார்க்கும்போது மேலே கூறிய விவரங்கள் அனைத்தையும் பெறலாம்.

வெற்றி நகர் கெய்ரோ!

எகிப்தின் தலைநகரமான கெய்ரோ ஆப்பிரிக்காவிலேயே பெரிய நகரம். கெய்ரோ என்றால் வெற்றி நகர் என்று பொருள். நைல் நதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்த நகரம் 5000 வருட பழமை வாய்ந்த ஒன்று. பல நூறு புகழ் பெற்ற அரசர்களைப் பார்த்த நகர் இது. ஒரு கோடி பேர் இங்கு வாழ்கின்றனர்.

கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் 40 டிகிரி செல்சி யஸ் உஷ்ணநிலையும் குளிர்காலத்தில் 14 டிகிரி குறைந்த பட்ச உஷ்ணநிலையும் இங்கு நிலவும். பயணிகள் பயப்படாமல் நடமாட, பாதுகாப்பான நகரம். செலவு குறைந்த நகரம்.

மால் ஆப் அரேபியா கெய்ரோவில் உள்ள பெரிய மால். இன்னும் ஆடை அணிகளை வாங்க பட்ஜெட்டுக்குத் தக்க பிரண்ட்லி மால்களும் பத்துக்கு மேல் உண்டு.

சொகுசுக் கப்பல் பயணம்

உலகின் பழம் பெரு நதியான நைல் நதியில் படகில் சொகுசு கப்பலில் பயணம் செய்து மகிழ முடியும். ஒரு நாள் முதல் ஆறு நாட்கள் வரை இந்தப் பயணங்கள் பயணிகளின் விருப்பத்திற்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் செங்கடலை ஒட்டி உள்ள கடற்கரைகளிலும் பயணிகள் திரளாகக் குழுமுகின்றனர். பவளப்பாறைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

அலெக்சாண்டர் நிர்மாணித்த அலெக்சாண்ட்ரியா

சினால் மற்றும் செங்கடல் கடற்கரையில் சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்த்து இயற்கை ஆர்வலர்கள் மகிழும்போது பழைய பண்பாடு, நினைவுச் சின்னங்களில் ஆர்வமுள்ளோர் லக்சார், அஸ்வான், அலெக்சாண்ட்ரியா ஆகிய இடங்களுக்குச் சென்று மகிழலாம்.

கெய்ரோவிலிருந்து லக்சார் 660 கிலோமீட்டர் தொலைவிலும் அலெஸ்டாண்ட்ரியா 218 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாபெரும் மன்னனான அலெக்சாண்டரால் நிறுவப்பட்ட அலெக்சாண்ட்ரியா, பழங்கால வடிவமைப்பிலான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. தோட்டங்களும், அழகிய நீர்நிலைகளும், இங்குள்ள ஸ்டான்லி பாலமும், பழைய கால கோட்டையும், அரசியர் அணிந்த நகைகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்களும் மக்களை இங்கு ஈர்க்கின்றன.

நைல் நதியின் நன்கொடை என்று புகழப்படும் எகிப்து கனவுகள், மர்மங்கள், மலரும் நினைவுகளைத் தரும் நாடு என புகழப்படுகிறது.

இங்கு வாழ்பவர்கள் கூறுவது : இங்கு வாருங்கள், உங்கள் கால் தடங்களைப் பதியுங்கள். மலரும் நினைவுகளை அள்ளிச் செல்லுங்கள் என்பது தான்!

பிரமிடின் அபூர்வ ஆற்றல்

பிரமிட் பல அபூர்வ ஆற்றல்களைக் கொண்டுள்ளது.

இதன் உள்ளே வைக்கப்பட்ட பால் மற்றும் தண்ணீர், சிறிது நேரத்திலேயே சக்தி ஊட்டப்பட்டதாக ஆகிறது.

பெரிய அளவில் கார்ட்போர்டில் கூட செய்து உருவாக்கப்பட்ட பிரமிடில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவியரின் அறிவுத்திறன் கூடுகிறது. ஞாபக சக்தி கூடுகிறது.

பிரமிடில் தியானம் செய்தால் சாந்தி ஏற்படுகிறது. இப்படி பல்வேறு பயன்களைத் தருவதாக பல நூறு புத்தகங்கள் விளக்குகின்றன.

பிரமிடாலஜி என்ற பிரமிட் பற்றி ஒரு தனி இயல் உருவாகி இருப்பதோடு பிரமிட் என்சைக்ளோபீடியாவும் புத்தக சந்தைக்கு இப்போது வந்து விட்டது.

உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய புத்தகமான சைகிக் டிஸ்கவரீஸ் பிஹைண்ட் தி அயர்ன் கர்டன் (psychic discoveriesh behind the iron curtain) என்ற புத்தகத்தை எழுதியுள்ள ஷீலா ஆஸ்ட்ராண்டர் பிரமிடின் உள்ளே காய்கறிகள், முட்டை வைத்தால் அவை கெட்டுப் போகாது என்பதைக் குறிப்பிடுகிறார்.

தலைவலி உள்ளவர்கள் பிரமிட் தொப்பியை மாட்டிக்கொண்டால் தலைவலி தீர்கிறது. இதை அணிந்து உலகில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.

பிரபலமான பிரமிட் கட்டிடங்கள்

மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் பிரமிட் அமைப்பில் உள்ளது.

பெங்களூரு அருகில் உள்ள பிரமாண்டமான பிரமிட் தியான மண்டபம் 28 ஏக்கர் பரப்பளவில் குன்றுகளுக்கும் பசுமை வயல்களுக்கும் நடுவில் அமைக்கப்பட்ட ஒன்று. 100 அடி உயரமுள்ள பிரமிடில் பல்வேறு தியான நிகழ்ச்சிகள் அவ்வப்பொழுது நடைபெறுகின்றன.

கோவையில் உள்ள பிரமிட் செண்டர், அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வடக்கு தெற்கு அச்சில் 9206 சதுர அடி பரப்பில் 89 அடியை அடிப்பக்கத்திலும் 63 அடியை உயரத்திலும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரமிட் சர்ச் உள்ளிட்ட ஏராளமான பிரமிட் கட்டிடங்கள் உலகெங்கும் உருவாக்கப்பட்டு மக்களுக்குப் பலன் அளித்து வருகின்றன.

ஆர்வமுள்ளோருக்கு ஆற்றல் தருவது பிரமிட்!

தொடர்புக்கு:-

snagarajans@yahoo.com

Tags:    

Similar News