சிறப்புக் கட்டுரைகள்

ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளும் தபோவனமும்!

Published On 2024-06-22 16:45 IST   |   Update On 2024-06-22 16:45:00 IST
  • வடலூர் ராமலிங்க வள்ளலாரை சுவாமிகள் சந்தித்துள்ளார்.
  • அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தவம் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் தாத்தா சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் தாத்தா சுவாமிகளின் வயது என்ன என்றுதான் யாராலும் கண்டறிய முடியவில்லை.

அவரின் அன்பரான வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள், பலமுறை அவர் வயதை அறிய முற்பட்டுக் கேள்விகள் கேட்டிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் `மரம் பழுத்துக் கனிந்திருந்தால் அதன் பழத்தைப் பறித்துச் சாப்பிடாமல் மரத்தின் வயதையா கேட்டுக் கொண்டிருப்பது?` என்று சொல்லி தன் சரியான வயதைத் தெரிவிப்பதைத் தவிர்த்தே வந்திருக்கிறார் சுவாமிகள்.

கி.வா.ஜ. போலவே குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவும் சுவாமிகளின் அன்பர்களில் ஒருவர். அவர் சுவாமிகளைப் பற்றிக் கவிதை புனைந்திருக்கிறார்.

இரண்டு பாரதியார்களையும் தாம் சந்தித்திருப்பதாக ஒருமுறை சொல்லியிருக்கிறார் சுவாமிகள். ஒருவர் நந்தனார் சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார். இன்னொருவர் தேசியக் கவி மகாகவி பாரதியார். எனவே இவ்விருவர் காலத்திலும் சுவாமிகள் வாழ்ந்திருக்கிறார் எனத் தெரிகிறது.

ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் சற்றுக் குள்ளமானவர். பாரதியார் சொல்லும் குள்ளச்சாமி என்பவர் இவர்தான் என்று கருதுபவர்கள் உண்டு.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தோதாபுரி அளித்த தீட்சை பற்றியும் விவேகானந்தருக்கு பரமஹம்சர் அளித்த தீட்சை பற்றியும் தாம் தனிப்பட்ட முறையில் அறிந்ததாக ஞானானந்தகிரி சுவாமிகள் குறிப்பிட்டதுண்டு.

வடலூர் ராமலிங்க வள்ளலாரை சுவாமிகள் சந்தித்துள்ளார். மதுரைக் கோவிலில் சிறுவன் ரமணனைத் தாம் கண்டதாகவும் பின்னர் மகரிஷி ரமணராக அவர் பரிணாமம் பெற்ற போது திருவண்ணாமலையில் அவரைப் பார்த்ததாகவும் சுவாமிகள் கூறியதுண்டு.


ஸ்ரீரமணர் விரூபாட்ச குகையில் வசித்தபோது சுவாமிகள் அடிக்கடி அவரைச் சந்தித்து ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளார் என்பதும் பதிவாகியுள்ளது.

சீரடி பாபா, ஸ்ரீஅரவிந்தர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற அருளாளர்களை அவர் நேரில் சந்தித்துள்ளார்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுவாமிகளின் வயதை இன்னதென்று கணக்கிட முடியாமல் திகைப்பு ஏற்படுகிறது.

சுவாமிகளின் வயது நூற்றியைம்பது என்றும் இருநூறு என்றும் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் இவ்விதமெல்லாம் பற்பல ஊகங்கள் சொல்லப்படுகின்றன. எவ்விதமானாலும் நூறாண்டுகள் தாண்டிப் பற்பல ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.

மகான் ஸ்ரீராமானுஜர் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். காஞ்சி பரமாச்சாரியார் நூறாண்டு வாழ்ந்தார். பாரத தேசத்தில் நெடுங்காலம் வாழ்ந்த துறவியர் இன்னும் சிலர் உண்டு.

அதிக காலம் உடல் தரித்து வாழ்ந்து பக்தர்களை நெறிப்படுத்திய துறவியர் வரிசையில் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் பூர்வாசிரமம் பற்றிய செய்திகள் எதுவும் அதிகம் கிட்டவில்லை.

அவர் கன்னட தேசத்தில் மங்களபுரி என்ற ஊரில் வெங்கோபா கணபதி, சக்குபாய் ஆகிய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் என்றும், அவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்றும் சொல்லப்படுகிறது. அவர் தம் ஏழு வயதில் தம் தந்தையிடமிருந்து காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

இயற்கையிலேயே ஆன்மிக நாட்டத்துடன் திகழ்ந்த சுப்பிரமணியனுக்குச் சராசரிப் பள்ளிக் கல்வியில் அதிக ஈடுபாடு ஏற்படவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

அவருக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அடிக்கடி அவர்முன் ஒரு ஜோதி தோன்றி அவரை வழிநடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

திருப்பூர் கிருஷ்ணன்

இளம் வயதிலேயே அந்த ஜோதி காட்டும் வழியைப் பின்பற்றி அவர் வீட்டைத் துறந்து வெளியேறிவிட்டார். எல்லா உறவுகளையும் துறந்த அவர், தேசாந்திரியாகப் பற்பல இடங்களுக்குச் சென்றார்.

பாரத தேசமெங்கும் பல திருத்தலங்களில் உறைந்துள்ள தெய்வ சக்தியை ஆங்காங்குள்ள வடிவங்களில் பக்தியோடு வழிபட்டார். அவ்வகையில் பண்டரிபுரத்திற்கும் சென்று பாண்டுரங்கனையும் தரிசித்தார். ஏராளமான பக்தர்கள் எந்தப் பண்டரிநாதன் அருளில் திளைத்தார்களோ அதே பண்டரிநாதன் அருளில் இவரும் மூழ்கித் திளைத்தார்.

பின்னர் ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுவாமிகளை நேரில் சந்தித்து அவரால் ஈர்க்கப்பட்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் ஒன்று. இந்த மடம் ஆதிசங்கரரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான தோடகாச்சாரியார் பரம்பரையில் வரும் மடமாகும்.

இவரது அளவற்ற ஆன்மிக நாட்டத்தைக் கண்டு வியந்த சிவரத்னகிரி சுவாமிகள் இவரைத் தன் சீடராக ஏற்று ஆட்கொண்டார்.

அவரே இவரைத் துறவியாக்கி ஞானானந்தகிரி என்ற தீட்சா நாமத்தை இவருக்கு வழங்கினார். இவரது பற்றற்ற நிலைகண்டு மகிழ்ந்து, தனக்குப் பின் ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாகவும் இவரையே அறிவித்தார்.

சிவரத்னகிரி சுவாமிகள் சித்தி அடைந்தபின், ஜோதிர்மடத்தின் பீடாதிபதிப் பொறுப்பை ஏற்றார் ஞானானந்தகிரி சுவாமிகள். ஆனால் மடாபதியாகத் தொண்டு செய்வதை விடத் தவம் செய்வதிலேயே அவர் மனம் பெரிதும் ஈடுபட்டது.

எனவே பீடாதிபதி பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே வேறொருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தவமியற்ற இமய மலைக்குச் சென்றுவிட்டார். தனிமையில் இறைவனை ஓயாமல் சிந்திப்பதிலும் நாள்முழுவதும் மந்திர ஜபம் செய்வதிலும் அவருக்குப் பேரார்வம் இருந்தது.

இமய மலைப் பிரதேசங்களில் பனிக் குகைகளில் பற்பல ஆண்டுகளைத் தவத்தில் கழித்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தவம் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா எனப் பல இடங்களுக்கும் சென்றார். இறுதியாக தமிழகத்தில் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரை அடுத்து அமைந்துள்ள சித்தலிங்க மடம் என்ற சித்தர்கள் வாழ்ந்த புராதன தலத்தில் வந்து தங்கினார்.

அங்கு சிலகாலம் அருளாட்சி புரிந்து தன்னைத் தேடிவந்த அன்பர்களை வழிநடத்தினார்.

பின்னர், திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், தென்பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் ஞானானந்த தபோவனம் என்ற ஆசிரமம் ஒன்றை ஏற்படுத்தி, அந்தத் தபோவனத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழலானார். அங்கிருந்தபடியே பல அடியவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

தபோவனம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. அங்கு வந்தவர்கள் சுவாமிகளின் முன்னிலையில் தங்கள் மனத்தில் சாந்தி தோன்றுவதை அனுபவித்தார்கள். மலர் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவதுபோல், ஏராளமான அடியவர்கள் தபோவனத்தைத் தேடி வரத் தொடங்கினார்கள்.

தபோ வனத்தில் ஞான விநாயகர், ஞானஸ்கந்தர், ஞானபுரீசர், ஞானாம்பிகை, ஞானலட்சுமி, ஞானவேணுகோபாலர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகளை நிறுவி அந்தந்த சன்னிதிகளில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார் சுவாமிகள்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதை அவர் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னார். இந்த அரிய மனிதப் பிறவியை பொருட்செல்வம் மற்றும் சிற்றின்பத்தை நாடி வீணாக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். தன்னை உணர்வதும் அதன்வழி இறைவனை உணர்வதுமே மனித வாழ்க்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்குத் தொடக்கத்தில் உலகியல் ரீதியாக அவர்கள் வேண்டியதையெல்லாம் அருளினார். அவரிடம் எந்தக் கோரிக்கையைச் சொன்னாலும் சிறிது காலத்தில் அது நிறைவேறுவதை அறிந்த அன்பர்கள் அவரை மொய்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

அவ்விதம் அவர்களைக் கவர்ந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆன்மிகப் படிநிலையில் அவர்களை மேலே உயர்த்தி முக்திக்கு வழிகாட்டினார் சுவாமிகள். தேவாரம் திருவாசகம் போன்ற பக்திப் பனுவல்களை அடியவர்களுக்கு போதித்தார். அவற்றில் இளமையிலேயே ஈடுபாடு வரும் வகையில் குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்பிக்கச் செய்தார்.

கள்ளம் கபடமில்லாத குழந்தைகளிடம் அவருக்கு மிகுந்த அன்பிருந்தது. குழந்தைகளும் தாத்தா சுவாமிகளைப் பெரிதும் நேசித்தார்கள். அவர் சொன்னதையெல்லாம் கடைப்பிடிக்கும் அளவு அவர்கள் அவரை மதித்தார்கள்.

பஜனை சம்பிரதாயம் சார்ந்த நாம சங்கீர்த்தனத்தில் பேரார்வம் உடையவர் ஸ்ரீ சுவாமிகள். புகழ்பெற்ற நாம சங்கீர்த்தன விற்பன்னரும் ஜல சமாதியடைந்து மறைந்தவருமான ஹரிதாஸ்கிரி, இவரது பிரதான சீடர்களுள் ஒருவர்தான்.

ஹரிதாஸ்கிரி தாம் செல்லும் இடங்களிலெல்லாம் தமது குரு ஸ்ரீஞானானந்த கிரியின் பாதுகைகளை உடன் எடுத்துச் சென்று பூஜித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் நாள் இறைஜோதியில் ஐக்கியமானார். அவரைப் போன்ற துறவிகள் சித்த புருஷர்கள். அவர்கள் ஸித்தி அடைந்தாலும் காலம் கடந்தும் வாழ்கிறார்கள். அவர்களின் பொன்னுடல் நம் கண்ணை விட்டு மறைந்தாலும் அருளுடல் நிரந்தரமாய் வாழ்கிறது.

அடியவர்கள் சொல்லும் சில சம்பவங்கள் மூலம் அத்தகையோரது வாழ்க்கையின் சில துளிகளை நாம் அறியலாமே அன்றிப் பூரணமான வாழ்வை அறிய இயலாது. அது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மகத்துவம் உடையது. திருக்கோவிலூர் தபோவனத்தில் ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ளது.

அண்மையில் இந்தக் கோவிலுக்கு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பற்பல யாகங்கள் நிகழ்த்தப்பட்டன. சுவாமிகளுக்குப் பிடித்த பஜனை நிகழ்ச்சிகளும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

தமிழகத்தில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமிகளின் அருளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றும் சுவாமிகள் தம்மை நாடிவரும் அடியவர்களுக்கு அருள்புரியக் காத்திருக்கிறார். அவரைத் தேடி அவர் அருளைப் பெறத் தபோவனம் வரும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News