- உடல் அழிந்த பின்பு இந்த ஆத்மா எங்கு செல்ல வேண்டும்.
- இதமான மனதிற்கு மருந்து எது என்றால் தியானம் தான் சிறந்த வழியாகும்.
அன்பார்ந்த வாசகர்களே, தியானம் செய்தால் உடல் நலம், மனவளம், ஆன்மிக நலம் ஓங்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதை தொடங்கும் முன்பே, செயல்படுத்தினால் அதன் விளைவு நன்மையா, தீமையா என்பது தெரிந்துவிடும். நன்மை என்றால் மட்டுமே, அந்த செயலை நாம் செய்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக பட்டினத்தார் ஒரு படி மேலே போய் பரலோகம் சித்திக்கும் என்று தனது பாடலிலே கீழ்கண்டவாறு கூறுகிறார்..
'மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாசல் மட்டே
இமைக்கும் செல்வமும் மயானம் மட்டே
வழிக்கு துணை எது?
தினையாமளவு எள்ளளவாயினும் நீ முன் செய்த தவம்
தனையாள பரலோகம் சித்திக்கும் இது சத்தியமே' - என்கிறார்.
இதன் பொருள் என்னவென்றால், நாம் இறந்து விட்டால், நம் மனைவி, பெற்ற குழந்தைகள், உறவுகள், வாழ்ந்த வாழ்க்கை, சேர்த்து வைத்த நகை, பணம், நிலம், வீடு, வாகனம் இவை அனைத்தும் மரணத்திற்கு பிறகு, நம் வாசல் தாண்டி வராது.
இமைக்கும் செல்வம் என்றால், நமது வாரிசு, மயானத்தில் இறுதி சடங்கு செய்யும் வரை தான் இருப்பா். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் ஒன்று எரித்து விட்டோ அல்லது புதைத்து விட்டோ சென்று விடுவர்.
உடல் அழிந்த பின்பு இந்த ஆத்மா எங்கு செல்ல வேண்டும். கர்ம வினை பதிவுகளின் பலனாக மறுபடி பிறக்க வேண்டுமா? இல்லையா என்று கேட்கிறார்.
அடுத்த வரியிலேயே நாம் வாழும் காலத்திலே, இறப்பதற்கு முன் தினையளவு அல்லது எள்ளளவு தியானம் செய்து இருந்தால், இந்த குழப்பம் இருக்காது. ஆத்மா மறுபிறவி இல்லாமல் இறைவனோடு இரண்டர கலந்து விடும் என்று குறிப்பிடுகிறார்.
அதனால் தான் நம் முன்னோர்கள், தினமும் நம்மை சிறிது நேரம் கண்களை மூடி கொண்டு சும்மா இரு என்று சொன்னார்கள். சும்மா இருந்தால் நமக்கு சுகம் கிடைக்கும். சுகம் என்பது மனதின் குணம். எனவே தான் இதமான மனம் உடையவர் தான் மனிதர் என்கிறோம்.
இதமான மனதிற்கு மருந்து எது என்றால் தியானம் தான் சிறந்த வழியாகும். இதையே மகான் விவேகானந்தர் உன் குண்டலினி சக்தியை தியானம் என்னும் கோலால் மெதுவாக தட்டி எழுப்பு என்கிறார். இந்த பிரபஞ்சம் ஆனது இறைவனுடைய படைப்பிலே மூன்றரை மண்டலங்களாக உள்ளது என்று வேதம் சொல்கிறது. அதே போல, நமது முதுகு தண்டின் கீழ் உள்ள மூலாதாரத்திலே நமது குண்டலினி சக்தியானது மூன்றரை மண்டலங்களாக உள்ளது. அதனால் தான் அண்டத்தில் உள்ளது, எதுவோ அதுவே இந்த பிண்டத்திலும் உள்ளது என்று கூறுகின்றனர்.
குண்டலினி சக்தியை குரு ஆனவர் சீடரின் மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியாக மேல் எழுப்பி அந்த சக்தியை புருவ மத்தியில் நிலை நிறுத்துவார். மூலாதாரத்தில் இருந்து மேல் எழும்பிய உயிர் சக்தி புருவ மையம் வந்தவுடன் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது. இதுவே ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் ஆகும். இதை ஒரு குரு மூலமாக மட்டுமே மேல் எழுப்ப வேண்டும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை தான் கீதையிலே பகவான் கிருஷ்ணர், எவர் ஒருவர் வெளி உலக நாட்டத்தை மறந்து, தனது ஐந்து புலன்களை கட்டுக்குள் கொண்டு வந்து நாசியின் வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்லும் மூச்சு காற்றை, புருவ மத்தியில் நிறுத்தி எவர் ஒருவர் தியானம் செய்கிறாறோ அவரே யோகி என்று குறிப்பிடுகிறார். இதையே வேதாத்திரி மகரிஷி ஞான ஆசிரியர்கள் மூலமாக குண்டலினி சக்தியை மேல் எழுப்பும் தவமாக ஆக்கினை தீட்சை நமக்கு வழங்குகிறார். ஆக்கினை என்றால் கட்டளை என்பது பொருள். கட்டளை யாருக்கு என்றால், இத்தனை நாள் மனம் புலன்கள் வழியாக புற உலகத்தோடு தொடர்பு கொண்டு இன்ப, துன்ப அனுபவங்களை உணர்வதால் மனம் சொல்படி தான் நாம் கேட்டோம். ஆனால் இந்த ஆக்கினை தீட்சை (தியானம்) எடுத்தவுடன், நாம் என்ன சொல்கிறோமோ, நம் மனம் அதை கேட்கும். எனவே ஆக்கினை தீட்சை என்பது நம்முடைய மனதிற்கு இடும் கட்டளையாகும். இதற்கு நாம் தினமும் பழகுதல் அவசியம்.
சிறிது நேரத்திலே நம் மனதிற்கு எவ்வாறு கட்டளை இடவேண்டும் என்பதை பார்போம். முதலில் உடலையே கவனிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் அசைவுகளை நிறுத்த வேண்டும். உடல் அசைவுகளை நிறுத்த மனதிற்கு கட்டளை இடவேண்டும். இப்போது உடல் அசைவு அற்ற நிலையில், ஒரு கல் சிலை போல அமர்ந்து இருப்பதை உணர வேண்டும்.
அடுத்த நிலை எண்ணத்தின் ஓட்டங்களை குறைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். அதாவது மூச்சை உள் இழுக்கும் நேரமும், மூச்சை வெளிவிடும் நேரமும் எண்ணங்கள் குறைந்த நிலையில் வந்துவிடும்.
இப்போது உடல் அசைவு அற்ற நிலையிலும் மனம் ஓட்டம் குறைந்த நிலை வரும் போது குரு சுட்டி காட்டிய (தொட்டு காட்டிய) இடமான புருவ மத்தியில் மனம் வைத்து தியானம் செய்யும் போது உடல் முழுவதும் உள்ள உணர்வு மறைந்து புருவ மத்தியில் மட்டும் ஒரு இன்பமான உணர்வு ஏற்படும். அந்த இடத்திலே நாம் எதை உணர்கிறோமோ அதுவே உயிர்.
இந்த உலகத்திலே நாம் பார்க்க முடியாத இரண்டு எது என்றால் உயிரும், இறைவனும். ஆனால் தியானத்தின் மூலமாக இரண்டையும் நம்மால் உணர முடியும். எப்போது உயிரை உணர்கிறோமோ அதுவே இறைவனை உணர்வதற்கு சமம். ஏனெனில் அந்த உயிருக்குள் உயிராக இருப்பது தான் இறைவன்.
இந்த நிலையில் தியானம் செய்யும் போது, உடலின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய இறுதிமூச்சு வரை நம்மோடு பயணம் செய்யக்கூடியது இந்த உடல் மட்டுமே. அதற்கான மரியாதையை கொடுத்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைத்தால் தான் மனம் அமைதி நிலைக்கு செல்ல முடியும். இல்லை என்றால் தியானம் நமக்கு சித்தி ஆகாது.
கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
ஏனெனில் உடலிலே பல நோய்கள் மற்றும் வலிகளை வைத்து கொண்டு, நாம் தியானத்தில் அமர்ந்தால், சிறிது நேரத்திலே உடல் சார்ந்த வலிகள் தலை தூக்கும். மனம் ஒடுங்காமல், வலி பக்கம் மனம் சென்று தியானத்திற்கு தடையை ஏற்படுத்தி விடும். இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகிறது. ஏனெனில் உடலில் பிரச்சனை இருந்தால் அது நன்றாக உள்ள மனதை பாதித்து விடும். அது போல மனதில் பிரச்சனை இருந்தால் அது நன்றாக உள்ள உடலை பாதித்து விடும். உடலுக்கும் மனதிற்கும் பிரச்சனை வந்துவிட்டால் அது உயிரை பாதித்துவிடும்.
எனவே தியானத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் உடற்பயிற்சியும் அவசியம் என்பதை உணர வேண்டும். உடலும் மனமும் ஒன்று சேர்ந்து விட்டால், உயிர் நீண்ட ஆயுளாக மாறிவிடும். எப்போது உடல், மனம், உயிர் ஒன்று சேர்கிறதோ ஒரு யோகியின் நிலைக்கு மனிதரால் மாறிவிட முடியும். அதற்கு பிறகு தான் ஆத்மாவை சுத்தம் செய்ய கூடிய பயிற்சியான அக ஆராய்ச்சி என்கின்ற அகத்தாய்வு செய்தால் தான் நம்முடைய குணத்தை மாற்றி கொள்ள முடியும். இந்த அகம் நோக்கிய பயணத்திற்கு மனம் தான் முக்கிய துடுப்பு ஆகும். மனம் இந்த பயிற்சியின் மூலம் ஒடுங்கிவிட்டால் அடுத்த நிலையான ஆத்ம தரிசனம் என்ற முக்தி நிலைக்கு செல்லும் வழியாகிய மவுனம் என்கின்ற அற்புத நிலைக்கு செல்ல முடியும்.
இதை தான் மகான்கள், நீ பேசாது இருக்கும் போது, உனக்குள் இருக்கும் இறைவன் பேசுவது உனக்கு கேட்கும். இது தான் "ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலை" என்று கூறுவர்.
மனிதர் வாழும் காலத்திலேயே தெய்வமாக மாறுவதற்கு இந்த ஐந்து நிலைகளில் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது உடல், மனம், உயிர், குணம், ஆத்மா ஆகும். இதற்கு தினமும் உடலுக்கு உடற்பயிற்சியும், மனதிற்கு தியானம் பயிற்சியும், உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி விதியை மதியால் வெல்வதற்கு காயகல்பம் பயிற்சியும், குணத்தை மேம்படுத்த அகத்தாய்வு பயிற்சியும், தான் யார் என்பதை உணர்ந்து அதிலேயே லயித்து நிற்க மவுனப் பயிற்சியும் செய்தால் நீண்ட ஆயுள் நிச்சயம் கிடைக்கும். எந்த கர்மாவும் நம்மை பாதிக்காது. அதையும் மீறி ஏதாவது துன்பங்கள் வந்தால் அதை மனதார ஏற்று கொண்டு, அதில் இருந்து விடுபடுவது எப்படி என்பது புரியும்.
இந்த ஐந்து நிலைகளுக்கான பயிற்சிகளை தான் வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கம் மூலம் உலகம் முழுவதும் தன்னார்வ தொண்டுள்ளம் படைத்த ஞான ஆசிரியர்கள் மூலமாக மிகவும் எளிமையாக கற்று கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் மூலம் தன்னை அறியும் நிலை ஏற்படுகிறது. அதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டாமல், தன் குறைகளை உணரவும் ஏற்று கொள்ளமும் முடிகிறது. அதன் அடுத்த நிலையில் தான் அந்த குறைகளை போக்க என்ன வழி என்று சிந்திக்க முடிகிறது. அதன் தொடர் முயற்சியால் தான் நாம் வகுத்த வழியில் வாழ வாழ்க்கை பாதை நமக்கு அமைகிறது. இதை பற்றிய தெளிவான விளக்கங்களோடு உடல் சம்பந்தப்பட்ட நமது ஆராய்ச்சி தொடரும்.
போன்: 9444234348