சிறப்புக் கட்டுரைகள்
null

தலபுராண வேந்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை!

Published On 2024-06-15 16:45 IST   |   Update On 2024-06-15 16:55:00 IST
  • பிள்ளையின் சமகாலத்தில் வாழ்ந்தவர் தாண்டவராயத் தம்பிரான் என்ற பெரியவர்.
  • தமிழின் பரந்த இலக்கியப் பரப்பில் பிள்ளைக்கு இணையாகச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர்கள் யாருமில்லை.

உ.வே.சாமிநாதய்யருக்குத் தமிழ் கற்பித்த குரு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. தமிழ்த் தாத்தாவுக்கே ஆசிரியரான இவர் `தலபுராண வேந்தர்' என்று போற்றப்படும் பெருமை உடையவர்.

கடல்மடை திறந்ததுபோல் கவிதைகள் சொல்லும் ஆற்றல் படைத்த இவர் கவிஞர்களின் கவிஞர் என அழைக்கப்பட்டார்.

எழுத்தெண்ணிப் பாடவேண்டிய கட்டளைக் கலித்துறை என்ற இலக்கண வகையில் கூட, தங்குதடையில்லாமல் கவிசொல்லும் தமது அபாரத் திறமை காரணமாக `கவிக்காவிரி` என்ற பட்டம் பெற்றவர்.

எண்ணற்ற ஆலய வரலாறுகளை ஆராய்ந்து தலபுராணங்களை அழகிய செய்யுள்களில் எழுதிக் குவித்தவர். தங்கள் ஊர் ஆலயம் குறித்தும் இவர் தலபுராணம் எழுதித் தரவேண்டும் என்ற வேண்டுகோள்கள் இவர் வாழ்நாள் முழுவதும் இவருக்கு வந்த வண்ணமாகவே இருந்தன.

பல சைவத் திருத்தலங்களில் குடிகொண்ட இறைவன், இவர் மூலமாகத் தனக்கான தலபுராணங்களை எழுதுவித்துக் கொண்டான் என்பதே சரி.

சிதம்பரம் பிள்ளைக்கும், அன்னத்தாச்சி அம்மையாருக்கும் 6.4.1815 அன்று மகனாகப் பிறந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழில் அதிக எண்ணிக்கையில் செய்யுள் நூல்கள் எழுதியவர் என்ற வகையில் வரலாற்றில் பதிவானவர்.

குசேலோபாக்கியானம் என்ற செய்யுள் நூலைப் பிள்ளையவர்களும் அவருடைய மாணவர் தேவராச பிள்ளையும் இணைந்து இயற்றினார்கள் என்று சொல்வ துண்டு. ஆனால் மற்ற ஏராளமான நூல்கள் இவர் மட்டுமே எழுதிக் குவித்தவை.

கையில் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, தனக்குக் கவியெழுச்சி வரும்போதெல்லாம் உடனடியாக எந்த இடமானாலும் அங்கு அமர்ந்து கவிதைகள் எழுதியவர்.

தொண்ணூறுக்கும் மேற்பட்ட தலபுராணங்களைச் செய்யுள் வடிவில் எழுதிய இவர், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்ற பல வடிவங்களிலும் நூல்கள் இயற்றியுள்ளார்.

இவரது காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், முருகன் பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் பெரும்புகழ் பெற்றவை. (உண்மையில் மீனாட்சி சுந்தரம் `பிள்ளை` எழுதிய எல்லா நூல்களுமே ஒருவகையில் `பிள்ளைத் தமிழ்' தானே!)

சேக்கிழார் பிள்ளைத் தமிழில் இவர் எழுதிய `பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ!' என்ற தொடர் பின்னாளில் பெரும்புகழ் பெற்றுப் பலராலும் எடுத்தாளப்பட்டது.

திருப்பூர் கிருஷ்ணன்


`திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல், திருக்குடந்தை திரிபந்தாதி` போன்ற இவரது நூல்களும் பலராலும் பயிலப்படுபவை. `அம்பலவாண தேசிகர் கலம்பகம், வாட்போக்கிக் கலம்பகம்' போன்ற நூல்களாலும் இவர் பெருமை உயர்ந்தது.

பிள்ளை தமது அழகிய புத்தம்புதிய கற்பனைகளால் பக்தி இலக்கியத்தைப் பெரிதும் வளப்படுத்தியவர்.

அசதியாடல் என்ற வகையில் சிவபெருமான்மேல் வஞ்சப் புகழ்ச்சி அணியாகப் பல செய்யுள்களைத் தீட்டியுள்ளார். `திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை'யில் இவர் எழுதியுள்ள ஒரு பாடலில் வரும் கற்பனை நயமானது.

நூறு செய்யுள்களை உடைய அந்நூலில் `விழியிடந்தப்பி மகவரிந்தூட்டி` என வரும் பாடலில் தாம் ஏன் சிவனைச் சரணடையாமல் அகிலாண்ட நாயகியைச் சரணடைய நேர்ந்தது என்பதை விளக்குகிறார்.

இயற்பகை நாயனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர் வரலாற்றுச் செய்திகளையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறார்.

`மனைவியை விட்டுக்கொடுக்க என்னால் இயலாது, பிள்ளைக்கறி சமைக்கப் பிள்ளையைத் தரவும் இயலாது, என் கண்ணை இழக்கவும் என் மனம் இடம்தராது, இப்படியெல்லாம் செய்தால்தான் உன் கணவன் சிவன் அருள் புரிவான்.

ஆனால் நீ இதுபோன்ற செயல்களை எதிர்பார்ப்பவள் அல்லவே? எனவே உன்னைச் சரணடைந்தேன். என் நிலைமை குறித்து நீ உன் கணவன் சிவனிடம் சொன்னால் அவன் கட்டாயம் கேட்பான், எனக்காகப் பரிந்துரை செய் தாயே!` என தமிழ்நயம் கொஞ்சக் கொஞ்சத் தாயிடம் வேண்டுகிறார் பிள்ளை.


பிள்ளையவர்களின் இன்னொரு கற்பனை வியக்க வைக்கிறது. சிவபெருமான் திருநீறணிய, அந்தத் திருநீற்றின் துகள் பாம்பின் கண்ணில் சிறிது விழுந்து விட்டதாம். அதனால் அது சீறியதாம். பாம்பு ஏன் சீறுகிறது என்றறிய விழித்துப் பார்த்ததாம் நெற்றிக் கண்.

அடடா. நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்புப் பொறி பிறை நிலவின் மேல் அல்லவா பட்டுவிட்டது! அமுதைப் பொழியும் பிறைநிலவு சற்று உருகத் தொடங்கிவிட்டதே?

பொன்னார் மேனியன் புலித்தோலை அல்லவோ இடுப்பில் கட்டியிருக்கிறான்! அந்த அமுதத் துளி, புலித்தோல் மேல் படுகிறதே! அமுதம் பட்டால் புலித்தோல் வெறும் தோலாகவா இருக்கும்? அமுதத்தால் அதற்கு உயிர் கிட்டிவிடுமே? எனவே புலித்தோல் உண்மையான புலியாகவே மாறி விடுகிறது!

அந்த நிஜப் புலியைப் பார்த்த சிவனாரின் வாகனமான காளை மாடு மிரண்டு ஓடுகிறது என்று நயமாகத் தன் கற்பனைச் சித்திரத்தைத் தீட்டுகிறார் பிள்ளை!

இதுபோலவே இன்னோர் அழகிய கற்பனை, சிவன் சைவமா அசைவமா என்று ஆராய்ந்து முடிவு சொல்கிறது!

பிள்ளைக்கறி சாப்பிடுவதாகச் சிவன் சொன்னாலும் அவர் அந்தக் கறியைச் சாப்பிடவில்லை. சீராளா என்றழைத்ததும் கறியாகச் சமைக்கப்பட்ட சீராளன் உயிரோடு தோன்றிவிட்டான்.

நமக்கு ஓர் ஐயம் வருகிறது. பிள்ளைக் கறியை அவர் சாப்பிடவில்லை என்றாலும் கண்ணப்பன் அசைவ உணவை அவருக்குப் படைத்தானே? சிவபெருமான் அந்த அசைவ உணவை ஏற்றாரா இல்லையா? பார்த்து அங்கீகரித்தார், அவ்வளவுதான். சாப்பிட்டதாய்ச் செய்தி இல்லை.

உண்மையில் சிவன் சைவமா அசைவமா? பதில் சொல்கிறார் பிள்ளையவர்கள்.

`சிவனின் ஒரு கரத்தில் மான் இருக்கிறது. மானை வெட்டி மான்கறி உண்ண வேண்டுமானால் அதை வெட்ட இன்னொரு கரத்தில் மழு இருக்கிறது. வெட்டிய மாமிசத்தைத் தூய்மைப்படுத்த வேண்டுமானால், அதற்குத் தேவையான நீர் கங்கையாக சிவன் தலையிலேயே இருக்கிறது.

தூய்மை செய்த மாமிசத்தைச் சமைக்க வேண்டுமானால் நெருப்பும் சிவன் கையிலேயே இருக்கிறது. சமைத்த மாமிசத்தை வைத்துச் சாப்பிடத் தேவையான திருவோடும் கூடச் சிவனிடமே இருக்கிறது.

இத்தனை வசதிகள் இருந்தும் சிவன் கரத்தில் உள்ள அந்த மான் உயிரோடு தானே இருக்கிறது, இதிலிருந்தே தெரியவில்லையா சிவபெருமான் சைவ உணவுக்காரர்தான் என்று?` என வினவுகிறார் அவர்!

பிள்ளையின் சமகாலத்தில் வாழ்ந்தவர் தாண்டவராயத் தம்பிரான் என்ற பெரியவர். அவர் முகத்தில் கட்டி வந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம்.

அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட்டாற் போலிருக்கும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் உரையாடி அவரது சொல்லமுதத்தைச் செவியால் பருகலாம் என்று அவரைத் தேடிச்சென்றார் தம்பிரான்.

சொக்கவைக்கும் பிள்ளையவர்களின் சுந்தரப் பேச்சில் மனம் பறிகொடுத்தார். தம்பிரானின் கட்டியால் விளைந்த வலியை அவர் மறந்தேபோனார். இச்சம்பவம் குறித்துத் தம்பிரான் எழுதியுள்ள குறிப்பு தமிழ்நயம் செறிந்தது.

`அடியேன் திரிசிரபுரத்தில் மவுன சுவாமிகள் மடத்தில் பரு வரலால் பருவரல் உற்று, மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சம்பாஷணையால் அஞ்சு தினங்களையும் அஞ்சுதினங்களாகக் கழித்தேன்...' என்கிறார் அவர்.

(பரு வரல் - முகத்தில் கட்டி வருதல். பருவரல் - துன்பம். அஞ்சு தினம் - ஐந்து தினங்கள். அஞ் சுதினம் - அழகிய நல்ல நாட்கள்)

லண்டனில் இருந்து ஒரு தமிழ் அன்பர் பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். சரியான முகவரி தெரியாததால் `மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இந்தியா` என்று மட்டுமே முகவரியில் குறிப்பிட்டிருந்தார்.

கடிதம் மிகச் சரியாக அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது. தாம் வாழ்ந்த காலத்தில் அத்தகைய பெரும்புகழோடு விளங்கியவர் அவர்.

ஒருதுறை சார்ந்தவர்கள் அந்தத் துறையில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை. அதனால் பாட்டுக் கற்றுக் கொண்டிருந்த உ.வே.சா.வைப் பாட்டுக் கற்றுக் கொள்ளாதே என்று சொல்லித் தடுத்துவிட்டதாக உ.வே.சா. எழுதியுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனப் புலவராக விளங்கிய பிள்ளை வாழ்நாள் முழுவதும் தமிழ் நூல்களைத் தேடித் தேடிக் கற்பதும் கற்பிப்பதுமாகவே வாழ்ந்தார். நந்தன் கதை எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் இவரது சம காலத்தவர். இவரது புலமை அறிந்து இவரிடம் வாழ்த்துக் கவிபெற வேண்டி எவ்வளவோ முயற்சித்தார்.

நந்தனார் கீர்த்தனை நூலில் பேச்சு வழக்குகளும் ஆங்காங்கே உண்டு. இதனால் இலக்கணத்தின் மேல் பெருவிருப்புக் கொண்ட பிள்ளையவர்கள் வாழ்த்துக் கவி தராமல் காலந்தாழ்த்திக் கொண்டிருந்தார்.

ஒருமுறை பிள்ளையவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய `சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா` என்ற பாடலைக் கேட்டு வியந்தது பிள்ளையவர்களின் உள்ளம். உடனே தன் கருத்தை மாற்றிக்கொண்டு நந்தனார் கீர்த்தனை நூலுக்கு வாழ்த்துரை வழங்கினார் பிள்ளை.

1.2.1876-ல் அவர் காலமானார். சீடர் ஒருவரிடம் திருவாசகம் படி என்ற கருத்தில் திருவாசகம் என்று சொன்ன அவர் கண்மூடிவிட்டார். அவர் இறுதியாகச் சொன்ன ஒரு வாசகம் திருவாசகம் என்பதுதான்.

அவர் காலமானபோது உடனிருந்த சீடர்கள் சொன்ன சொற்கள் அவர் பெருமையை உணர்த்தும். `தமிழ்க் காளிதாசரே. போய்விட்டீரா?' என்றும் `இன்றைய கம்பரே போய்விட்டீரா?` என்றும் அவர்கள் கதறி அழுதார்கள்.

தமிழின் பரந்த இலக்கியப் பரப்பில் பிள்ளைக்கு இணையாகச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர்கள் யாருமில்லை. தமிழின் செழுமை நிறைந்த பக்தி இலக்கிய வரலாற்றில் என்றென்றும் ஒரு மாணிக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News