null
வைட்டமின் பி12-ன் அவசியம் அறிவோம்
- குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம்.
- ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம்.
வைட்டமின் "பி12" (B12) மிகவும் சக்தி வாய்ந்த, நீரில் கரையும் ''பி''-காப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இது நம் உடலின் ஆற்றல் மையமாகச் செயல்படுகிறது. நம் உடல் வைட்டமின் "பி12"-ஐ தானாகத் தயாரிக்க முடியாது. எனவே தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் "பி12" நம் உடல் நலனை எவ்வாறு பேணிப்பாதுகாக்கிறது? எவ்வளவு இருக்க வேண்டும்? அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள் யாவை? எந்த உணவில் அதிகமாக இருக்கிறது? அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் யாவை? என்பன பற்றி இப்போது பார்க்கலாம்.
நம் உடல் நலனில் வைட்டமின் "பி12"-ன் பங்கு என்ன?
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம். மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முக்கியம். மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு முக்கியம். ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம்.
நம் அணுக்களில் உள்ள டிஎன்ஏ-வின் உருவாக்கத்திற்கு முக்கியம். ஞாபக மறதிநோய் வராமல் தடுப்பதற்கு முக்கியம்.
ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம்.
பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கிறது.
இதய நலனுக்கு உதவுகிறது. நகம், தோல், கண்களின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது.
இவ்வளவு நன்மைகளைத் தரும் வைட்டமின் "பி12"-ஐப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் அதன் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
ஒரு நாளைக்குத் தேவையான அளவு என்ன?
மரு.அ.வேணி
வைட்டமின் "பி12" ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவானது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அவை பின்வருமாறு மைக்கிரோ கிராம் அளவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
*பிறந்த குழந்தைக்கு - 0.4 மைக்கிரோ கிராம்
*ஒரு வயதுக் குழந்தைக்கு - 0.5 மைக்கிரோ கிராம்
*1-3 வயதுக் குழந்தைகளுக்கு - 0.9 மைக்கிரோ கிராம்
*4-8 வயதுக் குழந்தைகளுக்கு - 1.2 மைக்கிரோ கிராம்
*9-13 சிறார்களுக்கு - 1.8 மைக்கிரோ கிராம்
*14 வயதிற்குப் பிறகு - 2.4 மைக்கிரோ கிராம்
உணவில் உள்ள "பி12" இரைப்பையில் உள்ள ஒரு இன்ட்ரன்சிக் பேக்டரோடு இணைந்து சிறுகுடலைச் சென்றடைந்து அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாக கல்லீரலைச் சென்றடைகிறது. நம் கல்லீரலில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குத் தேவையான "பி12" சேமித்து வைக்கப்படுகிறது.
எனவே சில நாட்கள் நாம் உணவின் வழியாகக் கொடுக்க முடியாமல் போனாலும், கல்லீரலில் உள்ள சேமிப்பில் இருந்து நம் உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்கள் உண்டாகின்றன.
வைட்டமின் "பி12" குறைபாடு யாருக்கு அதிகமாக வருகிறது?
அசைவ உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு "பி12" குறைபாடு வருகிறது. ஆனால் அசைவ உணவு எடுத்துக் கொள்ளாத அனைவருக்குமே வரும் என்று கூறஇயலாது. ஒரு சிலர் மட்டுமே இதன் குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.
மது அருந்துபவர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்படுகிறது, ஏனென்றால் பி12-ஐ உறிஞ்சும் தன்மை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மது கல்லீரலை பாதிப்பதால் "பி12"-ஐ சேமித்து வைக்கும் தன்மையைக் கல்லீரல் இழந்து விடுவதும் இதற்கு ஒரு காரணம்.
தொடர்ந்து வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் "பி12" குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்குச் சிறுகுடலை முற்றிலுமாக நீக்கி அறுவை சிகிச்சை செய்யும்போது வைட்டமின் "பி12" குறைபாடு ஏற்படுகிறது. சில சிறுகுடல் நோய்களில் வைட்டமின் "பி12"-ஐ உறிஞ்சும் தன்மை சிறு குடலுக்கு இல்லாமல் போகும்போதும் குறைபாடு ஏற்படலாம். அட்ரோபிக் கேஸ்ட்ரைடிஸ் எனப்படும் வயிற்றுப்புண் நோயாலும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.
"பி12" குறைவதால் ஏற்படும் சிக்கல்களும் அதன் அறிகுறிகளும்
ரத்தச்சோகை-
இதனால் உடல் சோர்வு, சோம்பல் மற்றும் பலவீனம் ஆகியவை ஏற்படுகின்றன.
நரம்புத் தளர்ச்சி-
கால்களில் உணர்ச்சி குறைவது போன்ற உணர்வு, ஊசி குத்துவது போல் கால் விரல் நுனிகள் இருப்பது, நடக்கும்போது பாதங்கள் பஞ்சு மெத்தையில் நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவது ஆகியவைகள் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் ஆகும். நீரிழிவு நோயாளிகள் "பி12" குறைபாடு உள்ளதா? என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது, ஏனென்றால் நீரிழிவு நோய் 5 வருடங்களுக்கு மேலாக இருக்கும்போது நரம்புத் தளர்ச்சி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இவர்களுக்கு "பி12" குறைபாடு சேரும்போது நரம்புத் தளர்ச்சியின் வீரியத் தன்மை அதிகரிக்கிறது.
பார்வை நரம்புகளைப் பாதிக்கும் நோய்-
ஆப்டிக் நியூரைட்டிஸ் என்ற இந்த மைலின் சிதைவு நோய் வருவதற்கு வைட்டமின் "பி12" குறைபாடும் ஒரு முக்கியக் காரணம். இதில் நோயாளிக்குப் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது.
ஞாபக மறதி நோய்-
புதிதாக நடக்கும் நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும். எனவே இவர்கள் பழைய நினைவுகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டே இருப்பார்கள். புதிதாக நடப்பவைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனாலேயே பல குடும்பங்களில் சிக்கல்கள் வருகின்றன.
மன அழுத்தம், மனப்பதற்றம்-
நம் மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு "பி12" மிகமுக்கியப் பங்கு வகிப்பதால் இதன் குறைபாட்டால் வேதியியல் பொருட்களின் சுரப்புத் தன்மை பாதிக்கப்படுவது, மனம் தொடர்பான நோய்களுக்குக் காரணமாகிறது.
உறக்கமின்மை-
மனஅழுத்தம் அதிகரிப்பது உறக்கமின்மைக்கு காரணமாகிறது.
தோலின் நிறம் வெளிரிப்போதல்-
ரத்தச்சோகை ஏற்படுவதால் தோலின் நிறம் குறைகிறது, சுவாசித்தலில் பிரச்சனை ஏற்படுகிறது.
செரிமானக் கோளாறுகள் மற்றும் பசி உணர்வு குறைதல்.
வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்கள்:
அசைவ உணவுகள்-
முட்டை, மீன் மற்றும் கோழி, ஈரல் மற்றும் சிவப்பு மாமிசம்.
சைவ உணவுகள்-
வலு ஊட்டப்பட்ட தானியங்கள், பால் பொருட்கள், சோயா, பாதாம் உள்ளிட்டவைகளில் அதிக அளவில் வைட்டமின் "பி12"உள்ளது.
இந்த வைட்டமின் "பி12" -ஐ அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது இதனால் தலைச்சுற்றல், தலைவலி, மனப்பதற்றம் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நம் உடலின் ஆரோக்கியத்திற்கு "பி12" அவசியம் என்பதையும், ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவையும், எந்த உணவில் அதிகம் உள்ளது என்பது பற்றியும் இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.