சிறப்புக் கட்டுரைகள்

மகிழ்வான மங்களூர் சுற்றுலா

Published On 2024-06-12 16:30 IST   |   Update On 2024-06-12 16:30:00 IST
  • கேரள கடற்கரை பகுதி முதல் மங்களூர் வரை பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
  • தசரா பண்டிகையின் பத்து நாட்கள் இங்குள்ள கொலு மண்டபத்தில் ஒன்பது தேவிகள் கொலு வைக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் போல் பரபரப்பு இல்லாமல் அரபிக் கடலோரம் அழகானதொரு நகரான மங்களூர் தென்கன்னட மாவட்ட தலைநகராக விளங்குகிறது.

இங்கு வசிக்கக்கூடிய மக்கள் பேசும் மொழிகளில் முதன்மையான மொழியாக துளு உள்ளது. கன்னடம், மலையாளம் இஸ்லாமிய மக்கள் பேசும் பேரி..இந்துக்கள் பேசும் கொங்கணி வேறு, கிறித்துவ கொங்கணி வேறு.. இவ்வாறாக பல மொழி பேசும் மக்களின் சங்கமமாக மங்களூர் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே இருக்கும் இந்த நகரை அடைவதற்கு முன் நேத்ராவதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள ரெயில் மற்றும் வாகனங்கள் செல்லக்கூடிய இரண்டு பாலங்களும் நம்மை வரவேற்கும். நேத்ராவதி மற்றும் குருபுரா நதிகள் இந்த நகரை சுற்றி வருகின்றன.

மங்களூரை ஒட்டி உள்ள இன்னொரு மாவட்டம் உடுப்பி. இந்த இரண்டு மாவட்டங்களும் ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கு மிகவும் உகந்த இடங்களை.. சிறப்பு வாய்ந்த கோவில்களை... கொண்டதாக உள்ளன.

குறிப்பாக வருடத்தின் 365 நாட்களும் தமிழகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் பேருந்துகள்... ரெயில்... விமானம்....மகிழுந்துகளின் வழி வந்து போய் கொண்டே இருப்பதன் மூலம் இந்த மாவட்டங்களின் சிறப்பை அறிய முடிகிறது.

கேரள கடற்கரை பகுதி முதல் மங்களூர் வரை பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பார்க்க வேண்டிய கோவில்கள் பல இருந்தாலும் மங்களூர் என பெயர் வர காரணமாக இருக்கும் மங்களாதேவி கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாக இருக்கிறது.

"குதிரொலி கோகர்நாத்"கோவில் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இப்போது கட்டியவாறு கண்களை கவரும் வகையில் உள்ளது. சுவர்களில் அமைக்கப்பட்ட கடவுள் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு தகதகவென மின்னுவதும் தூய்மையான பராமரிப்பும் நம்மை பார்த்து வா வா அழைப்பது போலிருக்கும். இந்த கோவிலில் மூலவராக "கோகர்ண நாதரும் அன்னையான அன்னபூரணியும்" அருள்பாலிக்கின்றனர். மற்றும் பல சன்னதிகளும் அழகுடன் பக்தி கலந்த உணர்வை ஊட்டும்.

தசரா பண்டிகையின் பத்து நாட்கள் இங்குள்ள கொலு மண்டபத்தில் ஒன்பது தேவிகள் கொலு வைக்கப்படுகிறது. மைசூர் தசரா போன்று துளு கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கியமான காட்சிகளை மையப்படுத்தி பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பவனி நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். (அடுத்த தசரா விடுமுறைக்கு மங்களூர் செல்ல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்)

கர்நாடக மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான கோவில், கதிரி மஞ்சுநாதர் கோவில் ஆகும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த கோவில் கேரள அமைப்பில் காணப்படுகிறது.

தேன்மொழி

இங்கு ஒன்பது பாகங்களாக பிரிக்கப்பட்ட அழகிய குளம் அமைந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு இந்த குளத்தில் பெண்கள் நீராடி இறைவனை வணங்குவார்கள்.

சுற்றிலும் பசுமையான மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் காசிக்கு நிகரான கோவிலாக வணங்கப்படுகிறது.

இங்குள்ள விநாயகர் சன்னதி ஆனைமுகத் தாவாரத்தில் இருந்து தொடர்ந்து கொட்டும் தீர்த்தம் காசியில் இருந்து வரும் கங்கையாக நம்பப்படுகிறது.

அந்த சன்னதிக்கு மேலே பாண்டவர்கள் வந்து தங்கி சென்றதாக சொல்லப்படும் குகையும் அதன் அருகில் மிக உயர்ந்த ஆஞ்சநேயர் சிலையும், அதையும் தாண்டி மேலே ஏறிச் செல்ல... குழந்தைகள் பெரியவர்கள் விளையாடுவதற்கும் சுற்றி திரிவதற்கும் ஏற்ற இடமாக "கதிரி பூங்கா" உள்ளது.

மேலும் இங்கு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிலா கிராஸ் சர்ச்...பிஜய் சர்ச்...ரொசாரிய சர்ச் போன்ற பல தேவாலயங்களும், மங்களூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ளாலா தர்கா போன்றவையும் சிறப்பு மிக்கவை.

செயின்ட் அலோசியஸ் தேவாலயத்தில் மேற்கூரையில் சுவர்களில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்று வரை வெகு அழகாக அப்படியே இருப்பதை காண முடிகிறது.

மங்களூர் நகரத்திற்கு வெளியே 35 கிலோமீட்டர் தொலைவில் "மூடுபத்திரி" என்ற இடத்தில் ஆயிரம் தூண்கள் கொண்ட ஜெயின் கோவில் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டட கலையாக விளங்குகிறது.

மங்களூர் புதிய துறைமுகம் அரபிக் கடலில் ஒரு முக்கியமான துறைமுகமாகும். மங்களூர் நெய்தல் நில மக்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை "தக்கே" என்ற இடத்தில் சந்தைப்படுத்துகின்றனர்.

"பொக்கே பட்டணா" என்ற இடத்தில் மிதக்கும் உணவகம் உள்ளது. இரவு நேரத்தில் இசையுடன் வண்ண விளக்குகள் மிளிர.. சைவ அசைவ உணவுகள் குறிப்பாக கடல் உணவுகளை ருசிப் பார்த்துக் கொண்டே நேத்ராவதி நதியில் பயணித்து பொழுதுபோக்கலாம்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நிச்சயதார்த்தம் போன்ற பல சுப நிகழ்ச்சிகளும் அந்த கப்பல் தளத்தில் கொண்டாடுகிறார்கள்.

பகல் நேரங்களில் சிறு படகுகள் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கு தாண்டி கடற்கரையில் வசிக்கும் கிராம மக்களுடன் நாமும் அந்த இயற்கை எழிலை அனுபவிக்கலாம்.

இங்கு மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை தொடர்வதால் அந்த காலத்தில் மீன் பிடிக்க தடை. மழைக் காலங்களில் இதை போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

கடற்கரைகள்:

மங்களூரையொட்டி பல்வேறு அழகிய கடற்கரைகள் உள்ளன. கேரள எல்லைக்கு அருகில் உள்ள சோமேஸ்வரா என்ற இடம் பாறைகள் நிறைந்த கடற்கரையாகும். இங்கு சோமேஸ்வரர் என்ற பழமையான கோவிலும் உள்ளது.

இந்த கடற்கரையில் மாலை 5 மணி அந்தி சாயும் வேளையில் உலா சென்றால் பாறையில் வந்துபோதும் அலைகள், நம்மீது தெறிக்கும் நீர்த்திவலைகள் அளிப்பது மகிழ்ச்சியானதொரு அனுபவம்.

மங்களூரை அடுத்து உள்ள பனம்பூர் கடற்கரை தற்போது சுற்றுலாப் பயணிகள் தேடிப் போகும் குட்டி கோவாவாக மாறி வருகிறது. "ஸ்கை டைனிங்" எனப்படும் 120 அடி உயர கோபுரத்தில் உணவகம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்து கடற்கரையின் எழிலை பருகிக் கொண்டே உணவு அருந்தலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

"சீ வாக்" என்னும் மிதக்கும் கடல் பாலத்தில் அலைகளின் வேகத்திற்கேற்ப நடப்பது, கடலின் மேல் நடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆழமில்லாத கடல் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் அலை மோதுகிறது.

பிலிகுலா: மங்களூர் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலிகுலா என்னும் இடம் பொழுதுபோக்குக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இடமாகும்.

மானசா தீம் பார்க்....நீர் சறுக்கு விளையாட்டுகள்... நீச்சல் குளம் மற்றும் சாகச விளையாட்டுக்கள் போன்ற பொழுதுபோக்குகள் நிறைந்த இடமாக அது இருக்கிறது.

அதன் அருகிலேயே உள்ள உயிரியல் பூங்காவில் வரிகுதிரை, ஒட்டகச்சிவிங்கி தவிர அனைத்து வகை விலங்கினங்களும் கண்டு ரசிக்கலாம்.

கோளரங்கம் மற்றும் இயற்பியல் செய்முறைகளை விளக்கும் வகையில் அரங்கமும் அமைந்துள்ளது. இது கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

அங்குள்ள ஏரியும் அதனை ஒட்டியுள்ள பூந்தோட்டங்களும் அந்த இடத்தை விட்டு நகராமல் நம்மை கட்டிப் போடக் கூடியவைகளாக இருக்கிறது.

இவை அனைத்தும் மங்களூர் நகரை சுற்றி 30 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதியில் அமைந்துள்ளன.

இங்கே இருக்கக்கூடிய துளு மக்களின் "யட்சகானா, பூத்த கோலா" என்ற பாரம்பரிய வழிபாட்டு முறை பார்க்க வியப்பாக இருக்கும். ஜல்லிக்கட்டு போன்று 'கதிரி கம்ளா' என்ற விழாவும் வருடத்தில் பல இடங்களில் பரவலாக நடத்தப்படுகிறது.

"குத்து மனே"என்று அழைக்கப்படுகின்ற வீடுகள் துளுவ மக்களின் பாரம்பரியத்தின் பண்புகளை பறைசாற்றுவதாக இருக்கின்றன.

இவ்வாறாக கடலும் மலையும் சூழ்ந்த இந்நகரம் மருத்துவம் பொறியியல் போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு ஏற்ற நகரமாகவும் உள்ளது.

பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் விமான சேவை இங்கு இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து ரெயில்களும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் செல்வதற்கும், மேலும் பல முக்கிய இடங்களுக்கு செல்வதற்கும் மங்களூர் மையமாக விளங்குகிறது. எனவே மங்களூர் சுற்றுலா வருபவர்கள் மகிழ்வான அனுபவங்களை நிச்சயம் பெறலாம்.

இணைய முகவரி:

thaenmozhi27@gmail.com

Tags:    

Similar News