- வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நம் மனதினை வருத்தப்படுத்தும் அளவுக்கு நடக்கலாம்.
- வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவ வழிபாட்டினை மேற்கொள்வோரும் உண்டு.
அன்றாட வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக போராடுகின்றோம். தினமும் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதம் ஏற்படுகின்றது. இப்படி நடந்தாலே அன்றைய நாள் முழுவதும் மனம் எதிலும் செல்லாமல் இந்த நிகழ்வினையே நினைத்து மூழ்குகின்றது. நம்மில் அநேகர் இப்படித்தான் வாழ்கின்றோம். இப்படி எல்லோரிடமும் வாதிட வேண்டும் என்ற அவசியம் இல்லையே!
கழுகு என்றாலே பட்சிகளின் ராஜா என்கின்றோம். இந்தப் பறவையின் முதுகின் மேல் அமர்ந்து அதன் கழுத்தினை காயப்படுத்தும் தைரியம் அண்டங்காக்கைக்கு உண்டு. ஆனால் அதற்காக கழுகு உருண்டு புறண்டு தன் வீரத்தினை காட்டுவதில்லை. அண்டங்காக்காவினை காயப்படுத்த முயல்வதுமில்லை. மிக உயர உயர பறக்க ஆரம்பித்து விடும். காக்கைகளோ மூச்சு விடுவதில் கடினமாகி கீழே விழுந்து விடும்.
இது போல் தான் நாமும் இருக்க வேண்டும். நம்மை நாம் முயன்று முன்னேற்ற பாதையில் சென்றால் பல தொந்தரவுகள் தானே விழுந்து விடும்.
இதனைப் பற்றி யாரிடமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. யாரும் அடுத்தவர் வாழ்வில் என்ன பிரச்சனை என்பதனை பார்ப்பதில்லை. பிறர் சொல்லி உங்கள் திறமையை அறிந்து கொள்வது என்பதனை காட்டிலும் உங்களின் சுய ஆய்வில் நீங்களே அறிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகவும் நலமாகவும் இருக்கும்.
ஒருவரின் இறுதி நேரத்தில் அவருடைய சாதனைகள் அவருக்கு பெரிதாக தெரியாது. அவரது நினைவில் நிற்கும் நிகழ்வுகளே அவருக்குத் தோன்றும். ஆக நல்ல நிகழ்வுகளை நாம் நன்கு வாழும் காலத்திலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது நம்முள் தான் இருக்கின்றது. நாம் ஏனோ அதனை வெளியில் தேடுகின்றோம்.
கீழே கூறப்படும் சில வரிகளையும் சற்று சிந்தித்துப் பார்க்கலாமே!
கமலி ஸ்ரீபால்
வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நம் மனதினை வருத்தப்படுத்தும் அளவுக்கு நடக்கலாம். ஆனால் காலம் அதனை ஆறவைத்து விடும். என் மகன், என் மனைவி, என் பணம் என எதனை நீங்கள் இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டாலும் அவை ஒருவரை விட்டு நீங்க தான் செய்யும். தாமரை இலை மேல் தண்ணீர் போல வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
பலரிடம் காணப்படும் குறைபாடுகள் என்ன என்றால் - என் திறமைக்கு என்னை சிறந்த பள்ளியில் சேர்த்திருக்கலாம். நான் கூடுதல் சாதனை செய்திருப்பேன். எனக்கு பாட்டில் ஆர்வம் அதிகம். ஆனால் அதற்கு எங்களுக்கு வசதி இல்லை என ஏதோ ஒரு குறையினை தன் வளர்ச்சிக்கு தடையாக கூறிக் கொண்டிருப்பர்.
பறவைகள் மூலம் எங்கெங்கோ விழும் விதைகள் நிலம் சரியில்லை, நீர் வளம் இல்லை என்று குறை கூறுவது இல்லை. கிடைக்கும் சூழ்நிலையில் முயற்சி செய்து வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மிகச்சிறந்த இடத்தில் இருக்கும் ஒருவரது பிள்ளைகள், எத்தனை சூழ்நிலை உதவி இருந்தாலும் அந்த இழப்பினை அடைய முடிவதில்லை. எந்த உதவியும் இல்லாத ஒருவர் உயர்நிலையினை அடைய தவறுவதுமில்லை. பூர்வ ஜென்ம பலன் என்ற ஒன்று இருந்தாலும் மனதினை ஒருமுகப்படுத்தி அதில் ஈடுபடும் பொழுது வெற்றி உறுதியாகின்றது. நம்மால் முடியுமா? என்று நினைப்பதை விட நம்மால் முடியும் என்று நினைப்பதும் கவனச் சிதறல் இல்லாமல் இருப்பதுமே வாழ்வின் முன்னேற்றத்தினை முடிவு செய்கின்றது.
நம்ம ஊரில் மக்கள் தன் சொந்த ஊருக்கு செல்லும் காரணமாக கூறுவது, குலதெய்வ வழிபாடு மற்றும் ஊரில் தேர் திருவிழா என்ற காரணங்களாக இருக்கும். தேர் திருவிழா என்றாலே ஊர் விழா கோலம் பூண்டு விடும். இறைவன் ஊர்வலமாக பிரமாண்டமாய் அலங்கரித்த தேரில் வீதியில் பவனி வருவதும் அந்த காட்சியினை கொண்டாடுவதும் வடத்தினை பிடித்து தேர் இழுப்பதும் மிகப் புண்ணிய செயல்கள். தேர் வடம் பிடிக்க அனைவரும் போட்டி போட்டு செல்லுவர்.
இந்த தேர் இழுப்பதன் பலனை தெய்வம் மகா பெரியவர் கூறியதையும் அறிவோமா!
ஒரு முறை நிலச் சொந்தக்காரர் ஒருவர் சொத்து தகராறு காரணமாக மன நிம்மதி இன்றி தவித்தார். காஞ்சி மகா பெரியவரை சென்று சந்தித்தார். அவரின் மனவேதனையை உணர்ந்த மகா பெரியவர் அவரிடம் தேர் இழுத்தீர்களா? என்று கேட்டார். அந்த நில சொந்தக்காரர் இல்லை என்று பதில் அளித்தார். ஒருமுறை தேர் இழுத்து விட்டு உங்கள் வேலைகளைத் தொடங்குங்கள். எல்லாம் நன்றாக நடக்கும் என்று ஆசிர்வதித்தார் மகா பெரியவர்.
சுமார் 3, 4 மாதங்களுக்குப் பிறகு அந்த நிலச் சொந்தக்காரர் மீண்டும் மகா பெரியவரை சந்திக்க வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
"தேர் இழுத்தாயோ" என்று மகா பெரியவர் கேட்க வந்தவரும் 'ஆம்! அதன் பிறகு எல்லாம் நன்றாக நடந்தது' என்றார்.
'தேர்' என்பது நடமாடும் கோவில். முதியவர்கள், நோயாளிகள், முடியாதவர்கள் இவர்களுக்கு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது சிரமமான செயல். அவர்களுக்காக இறைவனே வீதி வலம் வருகின்றார். அப்போது தெய்வ சக்தி ஊர் முழுவதும் அள்ளி கொட்டி கிடக்கும். தீய சக்திகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும். தேர் இழுக்கும் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்றே இருக்காது. தேர் வடம் பிடித்து இழுக்கும் போது பிரார்த்தனையின் சக்தி வலுப்பெறுகின்றது. தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கே மகா புண்ணியம் செய்திருக்க வேண்டும். நம்மால் ஆன பங்களிப்பினை அளிக்க வேண்டும்.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதால் * வெற்றி கிடைக்கும் * நோய்கள் தீரும் * வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் * கடவுள் அருள் கூடும் * மன நிம்மதி கிடைக்கும் * சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
இனி நீங்கள் எங்கு இருந்தாலும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தவற விட்டு விடக்கூடாது.
இந்த கட்டுரையினை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். மகா பெரியவரின் வாக்கு மகேசனின் வாக்கு ஆகும்.
உணர்ச்சிகள் நம் உடலை பாதித்து பாடாய் படுத்தி வீடுகிறது.
* அதிக கோபம் கல்லீரலை பலவீனப்படுத்துமாம்.
* அதிக கவலை வயிற்றினை பாதித்து சதா வயிற்றில் பிரச்சனை இருக்குமாம்.
* அதிக துக்கம் நுரையீரலை பாதிக்குமாம்.
* பயம் சிறுநீரகங்களை பாதிக்குமாம்.
* மன உளைச்சல் இருதயம், மூளையின் செயல்பாடுத் திறனை பாதிக்குமாம்.
இதனை ஆய்வு கட்டுரையாக குறிப்பிட்டு இருந்தனர். பொதுவில் வேதனை, கவலை எல்லாம் உடலை பாதிக்கும் என்பது உண்மையே.
இம்மாதிரி தேர் திருவிழா பண்டிகைகள் குல தெய்வ வழிபாட்டிற்கு அனைவரும் ஒன்று கூடுவது போன்றவை உடல் நலம், மன நலத்தினை நன்கு வைக்கும்.
இன்றைய கால கட்டத்தில் மக்கள் அநேக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எங்கு தீர்வு எனத் தேடும் போது கால பைரவர் வந்து மக்களை காப்பாற்றுகின்றார். பொதுவில் காளி, துர்க்கை, அம்மன்கள், கால பைரவர், அய்யனார் வழிபாடுகளை துடிப்பான தெய்வ வழிபாடுகள் என்று கூறுகின்றோம். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபமாக வழிபடப்படுகின்றார்.
சிவன் கோவில்களில் வடகிழக்கு பகுதியில் இருப்பவர். இவர் 12 கைகளுடன் காணப்படுபவர். நாகத்தினை பூணூலாக அணிந்திருப்பவர். அங்குசம், பாசக் கயிறு, சூலாயுதம் ஆயுதங்களை தாங்கியவர். நிர்வாண ரூபம் கொண்டவர்.
இவரது வாகனம் நாய். பைரவருக்கு கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உக்ர பைரவர் என பல ரூப வழிபாடுகள் உண்டு. காலத்தினையே கட்டுப்படுத்துவதால் இவரை கால பைரவர் என்கின்றனர்.
கால பைரவர் சனியின் குரு, 12 ராசிகள், நவக்கிரகங்களை கட்டுப்படுத்துபவர், பஞ்ச பூதங்களும் இவர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை ஆகும்.
சரி. எதற்காக இந்த பைரவ வழிபாடு இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது. பைரவரை வழிபட்டால் பயம் நீங்கும். பயம் நீங்க வேண்டும் என்றால் கவலை, கஷ்டம் நீங்க வேண்டும். ஆக கவலை, கஷ்டம் நீக்குபவர் பைரவர். அதிலும் தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் பைரவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வளர்பிறை அஷ்டமியிலும் பைரவ வழிபாடு செய்யலாம்.
பொதுவில் சிறப்பு வழிபாடாக பஞ்ச தீப எண்ணை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவர். சிலர் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவர். சிலர் உடைத்த தேங்காயில் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றுவர். சிலர் பூசணிக்காய் உடைத்து அதில் தீபம் ஏற்றுவர். இது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது. தீபம் பைரவ பகவானை நோக்கி இருக்க வேண்டும். சிவப்பு பூ, வில்வம் இவை பூஜைக்கு உகந்தது. நைவேத்தியமாக உப்பில்லா தயிர் சாதம் செய்வர். உளுந்து வடை மாலை சாத்துவர். வாசனை மலர்களும் சூட்டுவர். பைரவர் வாகனமாகிய நாய்க்கு பிஸ்கட் வாங்கி வைப்பர்.
பைரவரை வழிபட அனைத்து நாட்களும் உகந்ததே. ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலமும் உகந்த நாளாகும். பொதுவில் வளர்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்பவர்கள் தனது தேவைகள் நிறைவேற உதாரணமாக வேலை கிடைக்க, கல்யாணம் ஆக பைரவர் அருள வேண்டும் என பிரார்த்தனை செய்வர். தேய்பிறை அஷ்டமியில் பிரச்சனைகள் தீர உதாரணமாக கடன், நோய், எதிரிகள் தொல்லை போன்றவை நீங்க வழிபாடு செய்வர். பொதுவில் ஏதாவது ஒரு வழிபாட்டினை மேற்கொள்வது நல்லது.
பைரவர் மகா சக்தி கொண்டவர். எனவே உங்கள் வழிபாடுகள் நியாயமானதாக இருக்கட்டும்.
மிளகினை சிறிதளவு (எண்ணி போடும் பழக்கமும் உண்டு) சின்ன மூட்டையாக கட்டி அதை நல்லெண்ணை தீபத்தில் வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உள்ளது. மிளகு சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம், நைவேத்தியம் செய்யும் வழக்கமும் உள்ளது.
எதிரிகளை துவம்சம் செய்து விடுபவர் என்பதால் எதிரிகளால் அதிக கஷ்டப்படுபவர்கள் அவரவர் சக்திக்கேற்ப வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவ வழிபாட்டினை மேற்கொள்வோரும் உண்டு. பைரவ வழிபாடு செய்வோம். துயர் நீங்கி வாழ்வோம்.