சிறப்புக் கட்டுரைகள்

புதிய ஆட்சியாளர்கள் பழைய முரட்டு பயில்வான்கள் இல்லை

Published On 2024-06-07 15:15 IST   |   Update On 2024-06-07 15:15:00 IST
  • குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற ஒரே ஒரு தொகுதி இதுதான்.
  • அதிகாரச் சமநிலை மாறவில்லை. ஆனால் ஆட்சிச் சமன்பாடு சரிந்து விட்டது.

"உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். ஏழைத் தாய்மார்களின் தாலிகளைக் கூடப் பிடுங்கி விடுவார்கள்."

இந்த வெறுப்புப் பேச்சுகள் 2024 தேர்தலில் பெரும் விமர்சனத்துக்குள்ளானவை. அவை எழுப்பப்பட்ட குஜராத் மாநிலம் பனாஸ்கந்த் தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற ஒரே ஒரு தொகுதி இதுதான்.

வெற்றி வேட்பாளர் ஜெனிபென் தாகூர் என்கிற பெண் வேட்பாளர். எருமை வளர்ப்புக்குப் புகழ்பெற்றது பனாஸ்கந்த். அது ஒரு பால் உற்பத்திக் கேந்திரம்.

கேரளாவின் திருச்சூரில் பா.ஜ.க. பெற்ற ஒற்றை வெற்றிக்குக் கிடைத்த அதே முக்கியத்துவத்தைப் பனாஸ்கந்த் தொகுதியும் பெற்றது. குஜராத் மாநில அரசியலில் ஏற்படவிருக்கும் எதிர்கால மாற்றத்திற்கான திசை காட்டி அது.


பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரைகளை வாக்காளர்கள் பெரும்பாலும் நிராகரித்து இருக்கிறார்கள். இறுதிக் கட்ட தியானமும் கை கொடுக்கவில்லை.

ஜனநாயகத்தில் எண்ணிக்கையை விட எண்ணங்கள் முக்கியம் இந்திய வாக்காளர்கள் வெறுப்புப் பிரசாரத்தை நிராகரித்து இருக்கிறார்கள். ஆனாலும் எண்ணிக்கை பலமும் கூட்டணியும் சிம்மாசனத்தை நிர்ணயித்திருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் யூடியூப் சேனல்களுக்குச் சமர்ப்பணம். மெயின் மீடியா சொல்லாத விஷயங்களை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தவை அவை தான்! சில இந்தி மொழி யூடியூப் சேனல்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன.

குறைபாடுகள் இருந்தாலும் சரி பார்த்துச் சமன் செய்யும் அமைப்புகளாக 2024 தேர்தலில் திகழ்ந்தவை யூடியூப் சேனல்கள். அவற்றின் நம்பகத்தன்மையைத் தராதரம் பார்த்துப் பிரித்துப் புரிந்து கொண்டார்கள் இந்திய வாக்காளர்கள். சர்வ வல்லமை பொருந்திய டெல்லியால் வாய்ப் பூட்டுப் போட முடியவில்லை.


நேர்மையான வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கு எடுத்துக்காட்டு என்கிற வாதம் தவறு. ஏனென்றால் அட்டவணை மற்றும் பரப்புரைகளில் சமமான ஆடுகளத்தை ஆணையம் ஏற்படுத்தி இருந்தால் முடிவுகள் இன்னும் கூர்மைப்பட்டிருக்கும்.

அதிகாரச் சமநிலை மாறவில்லை. ஆனால் ஆட்சிச் சமன்பாடு சரிந்து விட்டது. இப்போதும் பாரதிய ஜனதா தான் தனிப்பெருங்கட்சி. ஆனால் நரேந்திர மோடியின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணிக் கபடியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது.

10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்த அதிகாரக் குவிப்பு இனி பரவலாக்கப்படும். பலவீனப்படுத்தப்பட்டிருந்த மக்களாட்சி அமைப்புகள் முதுகெலும்போடு தலை நிமிரும்.

இன்றைய புதிய ஆட்சியாளர்கள் பழைய முரட்டு பயில்வான்கள் இல்லை. ஆட்ட விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் கூட்டணி ஆட்சியால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் போன்ற எல்லா அமைப்புகளும் இனி சுதந்திரப் பெருமூச்சு விடலாம்.

மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி! அறிஞர் அண்ணாவின் தத்துவம் இதுதான்!! அது 2024லிலும் மீண்டும் நிரூபணமாகி இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மைக்கு இன்றியமையாத எண்ணிக்கையைக் கையில் வைத்திருக்கும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு. இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள்.

சென்ற 2014 மோடி வெற்றியில் நாயுடுவுக்கும் பங்கு உண்டு. ஆனால் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரம் காரணமாக அது 2018-ல் கசந்தது.

அதன் பின்னர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார் சந்திரபாபு நாயுடு. 2019 தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளோடு அவர் உடன்பாடு கண்டார்.

அதேபோல் நிதிஷ்குமார் 2014 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. உறவை முறித்துக் கொண்டார். மதச்சார்பற்ற ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று குரல் கொடுத்தார். மோடிக்கு எதிராக இந்தியா–கூட்டணி உருவாக்க முன் முயற்சி எடுத்தவர் அவர் தான்.

சுருக்கமாகச் சொன்னால் நிதிஷ்குமார் ஒரு நிர்பந்தக் குமார். சந்திரபாபு நாயுடு நிபந்தனை நாயகன். இப்போது இருவரும் மோடியின் வலது மற்றும் இடது கரங்கள். இருவரும் போடுகிற கிடுக்கிப் பிடிகள் போகப் போகக் குரல்வளையை நெரிக்கும்.

மோடி வெற்றி நாயகன் ஆன 2014 தேர்தலின் முதல் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உரையாற்றினார். பாரதிய ஜனதாவில் 3 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளதாக அவர் அப்போது கூறினார்.

"சட்டமன்றத் தேர்தல்களில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் மோடி மட்டும் அல்ல. சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராமன் சிங் ஆகியோரும் அவரைப் போலவே 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!" என்று அஹ்மத் நகரில் பிரசாரம் செய்தார் அத்வானி.

மத்தியபிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கரின் ராமன் சிங் ஆகிய இருவரும் மோடியால் ஓரங்கட்டப்பட்டனர். அத்வானிக்கும் அதே நிலை தான் பின்னர் ஏற்பட்டது. இப்போது சவுகான் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஆவார் என்ற செய்திகள் தலைநகரில் சிறக்கடித்துப் பறக்கின்றன.

அதே அத்வானி 1989-ல் 'வின்னர் டேக்ஸ் ஆல்!' என்றார். இரண்டாவது வந்தவர்தான் உண்மையான வெற்றியாளர் என்பது பொருள். முந்தைய 1984 தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுகள் வென்றிருந்த பா.ஜ.க. ஐந்தே ஆண்டுகளில் 85 சீட்டுகள் பெற்றது என்பதையே அவர் அப்படிக் குறிப்பிட்டார்.

தராசு ஷ்யாம்

அந்தத் தேர்தலில் 197 சீட் எடுத்து தனிப் பெருங்கட்சியாக வந்த காங்கிரஸ் டல் அடித்தது. ஆனால் வெறும் 85 எடுத்த பா.ஜ.க. உற்சாகப்பட்டது. அரசியல் சதுரங்கத்தில் சரியான நகர்வுகளைச் செய்யும் எதிர்க்கட்சி அடுத்த முறை ஆளுங்கட்சி என்பார்கள்.

இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெருங்கட்சியாக வந்த பா.ஜ.க.வில் பெரிய உற்சாகத்தைக் காணோம். ஏனென்றால் அது எதிர்பார்த்த மிருகபல மெஜாரிட்டி அதற்குக் கிடைக்கவில்லை.

மாறாக, 2-ம் இடத்துக்கு வந்திருக்கும் இந்தியா கூட்டணி, குறிப்பாக 99 இடம் பெற்றுள்ள காங்கிரஸ் துள்ளலில் இருக்கிறது.

காங்கிரஸ் தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருக்கிறது. பா.ஜ.க.வுடன் நேரடியாக மோதிய தொகுதிகளில் வெற்றி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. தலித் மற்றும் பட்டியல் பழங்குடி தொகுதிகளில் வாக்கு மற்றும் அதன் வெற்றி பெருகி இருக்கிறது.

இந்துத்துவத்தின் பட்டறையான யோகியின் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு இந்தியா கூட்டணி செக் வைத்திருக்கிறது. அங்கு பா.ஜ.க. வென்ற தொகுதிகளில் கூட 23 இடங்களில் வாக்கு வித்தியாசம் இரண்டு சதவீதம்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியின் பைசாபாத்

எம்.பி. இப்போது சமாஜ்வாடி கட்சி. பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்தி அந்த ஜனநாயகப் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது இந்தியா கூட்டணி.

இனி "உடனே என்.ஆர்.சி. அதற்கடுத்தாற்போல் பொது சிவில் சட்டம், பின்னர் பாரதம், அதற்கடுத்து ஒரே நாடு.. ஒரே தேர்தல், 2029க்கு முன் இந்து ராஷ்டிரம்தான்!" என்றெல்லாம் உருட்டிக் கொண்டிருந்தவர்கள் கப்சிப்! எதுவுமே இனிமேல் நிகழ வாய்ப்பு இல்லை.

பின்தங்கிய நிலையில் உள்ள இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை சந்திரபாபு கூர்மைப்படுத்தும்போது மோடி என்ன செய்வார்? பா.ஜ.க.வின் பலம் நிறைந்த பீகாரில் நிதிஷ் தன் வலிமையைப் பெருக்க முயற்சிப்பார். இப்போதே அவர் அங்கு தன் மகன் நிஷாந்த் குமாரைக் களத்துக்குக் கொண்டு வந்து விட்டார்.

லாலுவின் குடும்ப அரசியலை எதிர்த்தது பா.ஜ.க. இனி அது டெல்லிக்காக நிதிஷ் குமாரோடு அனுசரித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்..

என்ற சத்திமுற்றப் புலவரின் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.

மத நல்லிணக்கம் இந்தியாவின் சிறப்பு களில் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக அது பேராபத்தில் சிக்கியிருந்தது. இனி யார் நினைத்தாலும் மதம், மொழி மற்றும் பழங்குடிச் சிறுபான்மையினரின் உரிமைகள் மீது ஆக்கிரமிப்புச் செய்ய முடியாது.

கருத்துச் சுதந்திரம் மறு கட்டமைக்கப்படும். மத்திய புலனாய்வுத் துறைகள் ஏவிவிடப் படுவதும், அவற்றை வைத்து மாநிலக் கட்சிகளை உடைப்பதும் இனி பழங்கதை!

வெற்றுவேட்டு தியான ஸ்டண்ட்களை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பு மாற்று விலைவாசி உயர்வுக் கட்டுப்பாடு போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 100 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது.

நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மாதந்தோறும் மின்சார பில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றை 2025-க்குள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

டெல்லியின் புதிய சாம்ராஜ்ஜியத்தை வற்புறுத்தக் கூடிய எண்ணிக்கை பலத்தை வாக்காளர்கள் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டில் வழங்கி இருக்கிறார்கள். எனவே மக்கள் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்... வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அடுத்த தேர்தல்!

Tags:    

Similar News