- வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.
- உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.
அமெரிக்காவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் தவியாய்த் தவித்த ஒருவர் பிரமாண்டமான கடைகளை நிறுவி 4 லட்சம் பேரை தன்னிடம் வேலைக்கு அமர்த்திய ஒரு அதிசய மனிதராக மாறினார், அவர் யார் தெரியுமா? அவர் தான் வால்மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்!
பிறப்பும் இளமையும்: ஓக்லஹோமாவில், கிங்பிஷரில் 1918ம் ஆண்டு மார்ச் மாதம்
29-ந்தேதி தாமஸ் கிப்சன் வால்டன் என்பவருக்கும் நான்சி லீக்கும் சாமுவேல் மூர் வால்டன் மகனாகப் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்ட தந்தைக்கு வருமானம் சரியாக இல்லை. 1923-ல் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது தொழிலைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஊராகச் செல்ல ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில் 'கிரேட் டெப்ரஷன்" என்று அனைவராலும் அறியப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
சாப்பிடவே வழியில்லை. குடும்பம் தவித்தது. அன்றாடச் செலவுக்கு பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார்.
கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு 'டோர்-டெலிவரி' செய்தார். அன்றாடம் பேப்பர் வாங்குபவர்களுக்கு நாளிதழ்களைக் கொண்டு சென்று கொடுத்தார். எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வழியாய் குடும்பச் செலவை சமாளித்தார்.
1929 முதல் 1939 முடிய இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் பாதித்தது!
ஊர் ஊராகச் சென்ற குடும்பம் இப்போது கொலம்பியாவில் செட்டில் ஆனது. கொலம்பியாவில் தனது படிப்பை முடித்தார் வால்டன். பள்ளியில், "பல்துறை திறமை வாய்ந்த பையன்" என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த வால்டன் மிசவுரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். படிப்புச் செலவிற்கு பல்வேறு சிறு சிறு வேலைகளைச் செய்யலானார். டேபிள்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பதிலாக உணவைப் பெற்றுக் கொண்டார்.
1940-ல் கல்லூரியில் தேறிய அவரை அனைவரும் நிரந்தர வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்தார்.
கடை ஆரம்பிக்கும் எண்ணம்: மாதம் 75 டாலர் சம்பளத்திற்கு ஒரு நிர்வாகப் பயிற்சி பெறும் பயிற்சியாளராக அவர் ஐயோவா நகரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலக மகாயுத்தம் வரவே 1942ல் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது தான் அவருக்கு ஒரு கடை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!
1945-ல் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது மாமனாரிடமிருந்து 20000 டாலரைப் பெற்றார். தனது சேமிப்பாக இருந்த 5000 டாலரையும் சேர்த்து ஒரு கடையை அர்கான்சாசில் நியூபோர்ட் என்ற இடத்தில் வாங்கினார். 26-ம் வயதில் அவர் ஆரம்பித்த முதல் கடை இது!
ச.நாகராஜன்
தனது வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைத் தொடர்ந்து அவர் புகுத்திக் கொண்டே இருந்தார். கடைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.
அனைத்துப் பொருள்களும் அவர் கடையில் எப்போதும் இருக்கும்! விலை மிகவும் சரியாக இருக்கும்! வாடிக்கையாளர்களை வரவேற்று திருப்திப்படுத்தி அவர் அனுப்புவார்.
இதனால் மூன்றே ஆண்டுகளில் அவரது விற்பனை 80000 டாலரில் இருந்து 2,25,000 டாலராக ஆனது.
தனது கடையை அவருக்கு லீசுக்குக் கொடுத்திருந்த பெரும் செல்வந்தரான ஹோம்ஸ், வால்டனின் வெற்றியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார் . லீசை புதுப்பிக்க மறுத்தார். இது வால்டனுக்கு வணிகத்தில் முதல் பாடமாக அமைந்தது. தானே ஒரு சொந்தக் கடையை பெண்டன்வில்லி என்ற இடத்தில் ஆரம்பித்தார்.
ஏராளமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆகவே கடையின் மீது கவனம் செலுத்துவதே அவரது 24 மணி நேர வேலையாக ஆனது.
முதல் வால்மார்ட் கடை: 1962, ஜூலை மாதம் இரண்டாம் நாள் அர்கான்சாசில் ரோஜர்ஸ் என்னுமிடத்தில் முதல் வால்மார்ட் கடை அதே பெயருடன் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் எந்த வாடிக்கையாளரும் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்துப் பொருள்களையும் அவர் கடையில் அற்புதமாக அடுக்கி வைக்கும் முறையைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.
ஒவ்வொரு சிறு சிறு நகரத்திலும் கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்.
கடைகளில் பொருள்கள் தீரத் தீர உடனடியாக அதை நிரப்ப நிறைய சேமிப்புக் கிடங்குகளையும் அவர் தொடங்கினார். விலையில் சிறப்புத் தள்ளுபடி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
1977-ல் 190 கடைகள் இருந்தன. அதுவே 1985-ல் 800-ஆக வளர்ந்தது.
இந்த வெற்றியைப் பார்த்த அனைவரும் இதை 'வால்மார்ட்- எபெக்ட்" (வால்மார்ட் விளைவு) என்று கூற ஆரம்பித்தனர்.
6 லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையில் விற்பனையை அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட் செய்கிறது. ஒவ்வொரு விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியுறும் வகையில் அது மிக்க மரியாதையுடனும் மதிப்புடனும் செய்கிறது.
கடை அமைப்பு: சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: மிக பிரமாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய டிராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.
அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.
ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு 'க்விங் க்விங்' எச்சரிக்கை ஒலியை அது தரும்.
வால்மார்ட் கடைக்குப் போவதில் அனைவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக "பிடிக்க" வேண்டும்.
ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
குடும்பம்: 1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்சன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிட்டி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லரை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.
வால்டன் தம்பதியினருக்கு சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.
மறைவு: லுகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் 30-வது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.
மருத்துவமனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.
அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை 4 லட்சம். மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960. அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34).
விருதுகளும் பெற்ற சிறப்புகளும்: 1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து 'பிரசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்' விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.
இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமெரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.
வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.
வால்டனின் கொள்கையும் விதியும்: அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.
அவற்றில் முக்கியமானவை சில: "உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்."
"நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்."
"உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்."
"சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்"
உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:
சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது.
கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!