- பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
- படித்த பெற்றோர்களுக்குக்கூட தங்களுடைய பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவதில்லை.
"நான் குழந்தையா இருந்தப்போ எப்படி இருந்தேன் தெரியுமா? எங்க அப்பா அம்மா என்னை எப்படி வளர்த்தாங்க தெரியுமா?" என்று நாம் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறையாவது நம் பெற்றோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு காரணம், அதிநவீன நாகரிக வளர்ச்சி என்று சொல்லலாம்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊருக்கு ஒரு போன் இருந்த நிலை மாறி, இப்போது ஒருவருக்கு இரண்டு செல்போன்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதனால் வாழ்க்கைமுறை, சமுதாயம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு தனிநபரின் நடத்தை, குணாதியசங்கள் போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் கல்வி, தொழில் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி காரணமாக இப்போதுள்ள பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாமை, அவர்களுடைய படிப்பில் கவனம் செலுத்தமுடியாமை போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனாலேயே இன்று டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய வளர் இளம்பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. என்னதான் பள்ளிக்குச் சென்று பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினாலும் பெற்றோரின் நடத்தை மற்றும் அவர்களுடைய செயல்கள்தான் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் அமைதியாகவும், தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இன்றைக்கு பல பெற்றோர்கள், தங்களை தொல்லை செய்யக்கூடாது, சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஒரு வயது குழந்தை கையில்கூட செல்போன்களை கொடுக்கின்றனர். முன்பெல்லாம் நிலா காட்டி சாப்பாடு ஊட்டிய காலம் மாறி இப்போது செல்போன் காட்டினால்தான் சாப்பிடுவோம் என குழந்தைகளும் அடம்பிடிக்கின்றன.
இப்படி குழந்தை பருவத்தில் இருந்தே செல்போனும் கையுமாக வளரும் குழந்தை வளர் இளம் பருவத்தை அடையும்போது செல்போன் இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. இது யாருடைய தவறு? குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர் செய்யும் தவறுகள் குறித்தும், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்தும் சற்று விரிவாக காணலாம்.
செல்போனுக்கு அடிமையாகும் பெற்றோர்கள்:
கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு வரை படிக்கும்போது செல்போன் எதற்கு? என கேட்ட பெற்றோர்களே அதன்பிறகு படிப்பதற்காகவே செல்போன் வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முந்தைய தலைமுறை பெற்றோர்களுடன் ஒப்பிடுகையில் இப்போதுள்ள இளம் பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இப்போது இந்தியா போன்ற நாடுகளில் டிக்டாக் போன்ற செயலிகள் தடைசெய்யப்பட்டாலும் அதே வசதிகள் பிற செயலிகளிலும் வந்துவிட்டன. இதனை பார்த்து வளரும் குழந்தைகளும் அதேபோன்று வளருகின்றனர்.
மேலைநாடுகளில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்துடன் ஒன்ற முடியாத நிலை, பேச்சு மற்றும் செயல்திறன் குறைபாடு, மனிதர்களுடனான் தொடர்பின்மை போன்ற நிலை இருக்கின்றன. இதே நிலை இப்போது வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாவிட்டால் அதை அவமானமாகவே கருதும் அளவிற்கு பலரின் மனதிலும் ஒருவிதமான எதிர்மறை தாக்கத்தை சமுதாயம் ஏற்படுத்தி இருப்பதை நம்மால் மறுக்கமுடியாது.
இப்போதுள்ள படித்த பெற்றோர்களுக்குக்கூட தங்களுடைய பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாததுதான் அதற்கு காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டாலே போதும், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலைதான் இன்று 90 சதவீதம் பெற்றோருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். குழந்தைகள் நல்ல மார்க் வாங்காதபோதுதான், அவர்களுக்கு கவனக் குறைபாடு இருப்பதாக உளவியாளர்களை அணுகுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே பெற்றோருக்கு டிஜிட்டல் சாதனங்களின் மீதான ஈர்ப்பும் குழந்தைகளின் மீது அக்கறை இல்லாமையும் தான் என்கின்றன ஆய்வுத்தரவுகள்.
'பிரைவேட் டைம்' என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளிடம் செல்போன், டிவி, லேப்டாப் அல்லது டேப்லெட் என ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை கொடுத்துவிட்டு இவர்களுடைய வேலையை பார்ப்பதால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான நேரம் குறைந்து விடுகிறது. இதனால் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவதில்லை.
இப்படி பெற்றோரிடம் தனது அன்றாட செயல்களை பகிர்ந்துகொள்ளாத குழந்தைகள் தங்களையும் அறியாமல் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே பெற்றோர் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.
ஸ்க்ரீன் டைமினால் ஏற்படும் தாக்கங்கள்!
ஒரு ஆரோக்கியமான குழந்தை இரண்டு முதல் மூன்று வயதிற்குள் நன்றாக பேசத் தொடங்கும். அந்த வயதில்தான் பெற்றோரிடம் அதிக கேள்விகளை கேட்கும். அந்த சமயத்தில் நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு கேள்வித்திறனும் பேச்சுத்திறன் குறைபாடும் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுடன் நேரம் செலவிடும்போது மூளையில் பேச்சுத்திறனுக்கான இடம் சுருங்கிப்போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதேபோல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு கவனக் குறைவு, மோசமான நடத்தை, விமர்சன சிந்தனை, தவறான தகவல்களை மனதிற்குள் ஏற்றுதல், தூக்க பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
குறிப்பாக, டீன் ஏஜ் பருவத்தினர்கள் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். ஏதேனும் ஒருவர் ஒரு தவறான கருத்தை பதிவிட்டாலே மனம் சோர்ந்து போவதுடன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மனநல பிரச்சனைகள் போக, கண்பார்வை, செவித்திறன் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றில் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளானாலும் நிறைய பெற்றோருக்கு அதுகுறித்து ஆரம்பத்திலேயே தெரிவதில்லை. அவர்களுக்கு தெரியவரும்போது மனநல ஆலோசனை பெறவேண்டிய கட்டாயத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.
ரீல்ஸ் தாக்கம் - பெற்றோர்களே வற்புறுத்தும் நிலை:
சில நேரங்களில் குழந்தைகளே வெளியே சென்று விளையாடவேண்டும் என நினைத்தாலும் சில பெற்றோர்கள் ரீல்ஸ் செய்து போஸ்ட் போடுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு ஒரே காரணம், சமூக ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும் வருமானம்தான்.
உனக்கு எத்தனை பாலோவர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்பதே இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது. பாலோவர்கள் குறைவாக இருந்தால் தனக்கு திறமை இல்லை என தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடும் நிலைக்கு சில பெற்றோர்களும் நண்பர்களுமே குழந்தைகளை தள்ளுகின்றனர். சமீபகாலமாக இதுகுறித்த ரீல்ஸ்களும், மீம்ஸ்களும் டிரெண்டாகி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக, பிற குழந்தைகளுடன் ஓப்பிடும்போது அது தாழ்வு மனப்பான்மையையும் இயலாமையையும் வளர்த்துவிடும்.
பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:
சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகளை எப்படி மீட்பது? என்பது குறித்து பல பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். அவர்களுக்காக சில டிப்ஸ்:
குழந்தைகளுக்கு தானாக கெட்ட பழக்கங்கள் உருவாகாது. பெற்றோர்களை பார்த்து வளரும் பிள்ளைகளின் நடத்தையில் அவர்களுடைய பேச்சு, செயல்பாடுகள் போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தெரிந்தோ, தெரியாமலோ குழந்தைகள்முன்பு தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதோ அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதோ, பிறரை பற்றி தாழ்வாகவோ தரக்குறைவாகவோ பேசுவது கூடாது.
இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். நிறைய செயலிகளில் பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணம் 'சைல்டு - லாக்' வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் குழந்தைகள் என்ன போஸ்ட் செய்கிறார்கள்? எதை பார்க்கிறார்கள்? யாருடன் பேசுகிறார்கள்? எத்தனை மணிநேரம் ஒரு செயலியை பயன்படுத்துகிறார்கள்? என்பது போன்ற சமூக ஊடகங்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் பெற்றோரிடம் இருக்கவேண்டும்.
தினமும் பெற்றோர் குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள்? என்பதை கேட்டு தெரிந்துகொண்டு அதிலிருக்கும் நல்லது கெட்டதை எடுத்துக்கூற வேண்டும். சமூக ஊடகங்களில் தெரிந்த தெரியாத பலர் இருப்பதால் யாருடனும் தன்னை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்பதை புரிய வைக்கவேண்டும்.
சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்க்கும் பிள்ளைகளிடையே நடத்தையில் தவறான மாற்றங்கள் தெரிகிறதா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, தூங்கவேண்டிய நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் அதை தடுத்து குழந்தைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டியது பெற்றோரின் கடமை.
மூளை வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பாட்டுக்கு தூக்கம் மிகவும் அவசியம். தினசரி குழந்தைகள் 8 - 9 மணிநேரம் தூங்குவதை உறுதிசெய்யவேண்டும்.
அதேபோல் தினசரி வேலைகளை சரியாக செய்கிறார்களா? மனிதர்களுடைய தொடர்பை தவிர்த்து சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்களா? உடலுழைப்பின்றி எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கிறார்களா? என்பதையும் பெற்றோர் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம்.
-தாரா