null
- குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
- காசியில் வழிபட்ட பலனை இந்த தலத்தில் அருளியதாக வரலாறு உள்ளது.
உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே 'உமையாள்புரம்.' கும்பகோணத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உமையாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெருமைகள் அனேகம். பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ குங்கும சுந்தரி சமேத ஸ்ரீகாசி விசுவநாதரின் மகிமையையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் இங்கு உருவானதன் பின்னணியில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. விஜயா என்ற சுந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோவில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோவில் அமைக்க தகுதியான இடத்தை தேடி அலைந்தாள். இதற்காக தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது.
சுந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடும் தவம் புரிந்த குளம் உள்ளது. அந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சவுமாங்கல்யம் அளிக்கும் 'குங்கும சுந்தரி' என்ற அழகிய திருநாமத்துடன் காட்சி அளிக்கிறாள்.
கமலா என்ற பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத் தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால் இவ்வம்மனுக்கு 'குங்கும சுந்தரி' என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் 'தத்துவ உபதேசத்தை' முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி "எப்பொழுது உபதேசம் பெற வரலாம்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான், "எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கத்துடன் வருமாறு" கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே உமையாள்புரம் ஆகும்.
கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி மகா, அர்த்த மண்டபங்களை கடந்து சென்றால் கருவறை அடையலாம். அங்கு ஸ்ரீ காசி விசுவநாதர் அருள் காட்சி அளிக்கின்றார்.
காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்தார். எனவே காசியில் வழிபட்ட பலனை இந்த தலத்தில் அருளியதாக வரலாறு உள்ளது.
நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டலாம். காசி விசுவ நாதரை வழிபட்ட பிறகு பிரகாரம் வலம் வரும் போது தட்சிணா மூர்த்தி. வள்ளி, தேவயானை சமேத முருகப் பெருமானை வணங்கலாம்.
வடமேற்கில் தனி சந்நிதியில் குங்கும சுந்தரி அருள் பாலிக்கிறாள். அழகும். கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறுநகையுடன் நம்மைப் பார்த்து 'எதுவும் கேள் தருகிறேன்' என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியை காணக்கண் இரண்டு போதாது. நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! இத்தேவிக்கு குங்கும் அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். இந்த ஆலயத்தில் ஸ்ரீசண்டி கேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோவிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சன்னதியிலும் உணர முடிகிறது. இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோவில் கொண்டுள்ள 'காவற்காரப் பிள்ளையாரே' காரணம் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.
இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. ஆடி மாதம் முழுவதும் இந்த ஆலயத்தில் சவுந்தர்யலஹரி பாராயணம் செய்யப்படுகிறது. நவராத்திரி 10 நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத் ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்தசஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மாவிளக்கு ஏற்றினால் மழலை வரம்...
கும்பகோணம் அருகே குடவாசல் உள்ளது. இங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கீரணங் குடி ஸ்ரீபுற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில், நரசிங்கம்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, கீரணங்குடிக்குத் திருமணமாகி வந்தாளாம். அவளைப் பார்த்ததும் ஊர் மக்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு, 'அம்மனாட்டம் எவ்ளோ அழகா இருக்கா; கண்ல ஒளி மின்னுது பாருங்க...' என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுச் சென்றால், அன்றைய நாள் மிக இனிமையான நாளாகக் கழியும் என்றும், 'போன வேலை நல்லபடியா முடிஞ்சுச்சு' என்றும் ஒவ்வொருவரும் பாராட்டிப் பேசினார்கள்.
ஒருநாள்... அந்தப் பெண்ணுக்கு திடீரென அம்மை நோய் வந்தது. வீட்டைவிட்டு எங்கும் செல்லாமல், உள்ளேயே படுத்துக் கிடந்தாள். அவளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அந்தக் கிராமமே தவித்தது. இந்த நிலையில் ஒருநாள்... அவள் இறந்துவிட, வீட்டு வாசல் முன்பு திரண்ட ஊர் மக்கள் கதறினர். 'இவ இருந்த வரை ஊர்ல எல்லாமே நல்ல விதமாவே நடந்துச்சு. இனி என்ன ஆகுமோ!' என்று வருந்தினர்.
சில காலம் கழித்து... கீரணங் குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விளைநிலத்தில் உழுது கொண்டிருந்த போது, பூமியில் ஏதோ ஒன்று இடறித் தள்ளவே... அங்கிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த... அங்கே அம்மனின் விக்கிரகத் திருமேனி இருந்தது. 'இந்த அம்பாளின் முகத்தைப் பார்த்தியா..! சில வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல குடி வந்த பொண்ணு மாதிரியே முகம், சிரிப்பு, கண்கள் எல்லாம் இருக்கு பாரு!' என்று வியப்போடு சொல்லிச் சொல்லி மகிழ்ந்த கிராம மக்கள், அந்த இடத்திலேயே அம்மனைப் பிரதிஷ்டை செய்து, கோவிலும் எழுப்பினர். புற்று போல் இருந்த மேட்டில் இருந்து விக்கிரகம் கிடைத்ததால், ஸ்ரீபுற்று மாரியம்மன் என்றே திருநாமம் சூட்டி வழிபட ஆரம்பித்தார்கள். இங்கே, பரிவார தெய்வங்களான ஸ்ரீகருப்பன், ஸ்ரீகழுவடி யான், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியாச்சி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
பங்குனித் திருவிழா இங்கு விசேஷம்! அப்போது, அம்மன் திருவீதி உலாவாக வருவாள். பிறகு, அப்படியே நரசிங்கம் பேட்டைக்குச் சென்று திரும்புவாள். ஆவணி மாதத்தில், காத்தவராய சுவாமியின் சரித விழா நடைபெறும். ஆடி மாதம் வந்துவிட்டால், தினந்தோறும் திருவிழாதான்!
திருமணம் ஆகாத பெண்கள், பச்சரிசி மற்றும் சர்க்கரை கலந்து படையலிட்டு, மஞ்சள் சரடை (கயிறு) கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி விட்டு ஸ்ரீபுற்று மாரியம்மனைப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரன் கைகூடும்; ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து, வயிற்றில் மாவிளக்கு ஏற்றி வழிபட, விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்கின்றனர் பெண்கள்!
விழாக்களின்போது, ஊர்மக்கள் மொத்த மாக விரதம் மேற்கொள்வது இந்தக் கோவிலின் சிறப்பு. அந்தக் காலகட்டங்களில், கல்யாணம்- காது குத்து போன்ற வீட்டு விசேஷங்களைச் செய்யமாட்டார்கள். பாயில் படுக்கமாட்டார்கள். விழாக் காலங்களில், வெளியூர்க்காரர்கள் இங்கு தங்க அனுமதி இல்லை. உள்ளூர்க்காரர்களும் வெளியூரில் தங்குவதில்லை.