- தோஷ தாக்கங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுக்க பரிகார ஆலயங்கள் இருக்கின்றன.
- சிலரது ஜாதகத்தில் சுக்கிரனை சில குறிப்பிட்ட பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்.
ஒருவருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போதுதான் முன் ஜென்மவினை மற்றும் தோஷங்கள் பற்றிய நினைப்பே வரும். கடந்த பிறவிகளில் செய்த பாவங்கள்தான் தோஷமாக மாறி இந்த பிறவியில் பல வகைகளில் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்வது உண்டு. ஆனால் ஜாதக ரீதியாக அந்த தோஷ தாக்கங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுக்க பரிகார ஆலயங்கள் இருக்கின்றன.
எந்த தோஷத்துக்கு எந்த ஆலயத்துக்கு சென்றால் பிரச்சனை தீரும் என்பதை தெரிந்துக் கொண்டு செயல்படுவதுதான் நல்லது. ஏனெனில் தோஷம் என்று வாழ்வில் ஒன்றை மட்டுமே சுட்டிக்காட்டி விட்டு நகர்ந்து விட முடியாது.
ஒருவருக்கு ஒரு தோஷம் ஏற்பட்டு இருப்பதாக கருதினால் அந்த தோஷமானது வேறு சில வகையான தோஷங்களுடனும் நிச்சயமாக தொடர்பு கொண்டு இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக அமைப்புகளை கொண்டே இதை எளிதாக சொல்லி விட முடியும்.
அந்த வகையில் அமைந்து இருப்பதுதான் தார தோஷம். இந்த தோஷம் மற்ற தோஷங்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பாக செவ்வாய் தோஷத்தின் துணை தோஷம் என்று கூட தார தோஷத்தை ஜோதிடர்கள் குறிப்பிட்டு சொல்வது உண்டு. அதாவது செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்தால் தார தோஷமும் சேர்ந்து வரும் என்பார்கள்.
ஆனால் எல்லோருடைய ஜாதக அமைப்பிலும் அப்படி அமைவது இல்லை. செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் தார தோஷம் இல்லாமல் இருப்பது உண்டு. அது போல செவ்வாய் தோஷம் இல்லாமலேயே தார தோஷ பாதிப்புடன் இருப்பவர்களும் ஜாதக ரீதியாக எத்தனையோ பேர் உள்ளனர்.
எனவே ஒருவருக்கு தார தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒருவரது ஜாதகத்தின் கிரக அமைப்புகளை துல்லியமாக ஆய்வு செய்யும் போதுதான் சரியாக கண்டுபிடிக்க முடியும். பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்தையும், வாழ்க்கை துணைக்கான ஸ்தானத்தையும் அடிப்படையாக வைத்து தார தோஷத்தை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.
குடும்ப ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 2-ம் இடத்தை குறிக்கும். வாழ்க்கை துணைக்கான ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடத்தை குறிக்கும். இந்த இடங்களில் அமைந்திருக்கும் கிரகங்களை பொருத்துதான் தார தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடத்தில் பாவ கிரகங்கள் மிக கடுமையான நிலையில் அமர்ந்திருந்தால் அது தார தோஷத்துக்கு வழி வகுக்கும். சிலரது ஜாதகத்தில் சுக்கிரனை சில குறிப்பிட்ட பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த நிலையையும் தார தோஷம் என்றுதான் சொல்வார்கள். சூரியன் 7 மற்றும் 8-வது இடத்தில் இருந்தால் அதையும் தார தோஷம் என்று குறிப்பிடுவது உண்டு.
சனி தன் பார்வையால் 7 மற்றும் 8-ம் இடத்தை பார்வையிட்டால் அதுவும் தார தோஷத்துக்கு வழிவகுத்து விடும். சிலர் களத்திர தோஷத்தையும், தார தோஷத்தையும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டும் வேறுவேறு. தார தோஷம் சிலரது வாழ்வில் புயலை கூட ஏற்படுத்தி விடும்.
பொதுவாக செவ்வாய் தோஷம் அல்லது களத்திர தோஷத்துடன் கூடிய தார தோஷம் இருந்தால் அந்த ஜாதகக்காரர் மிக கவனமாக தனது எதிர்கால வாழ்க்கையை கையாள வேண்டும். திருமணம் விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பது அவசியம். இதை கருத்தில் கொண்டுதான் தார தோஷம் உடையவர்களை சற்று கால தாமதமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துவது உண்டு.
சிலருக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் திருமணத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. பரிகாரம் செய்து விட்டால் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் தார தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கையில் நிச்சயம் அது சூறாவளியை உருவாக்கி விடும். இதற்கு பயந்துதான் தார தோஷம் உள்ளவர்கள் 30 வயதை கடந்த பிறகு திருமணத்தை பற்றி யோசிப்பது உண்டு.
சிலர் தார தோஷம் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் துணிந்து திருமணம் செய்வார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே தம்பதியினர் இடையே தேவையில்லாமல் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. அது விரும்பதகாத முடிவுகளை கொடுத்து விடும். சில ஜோதிடர்கள் தார தோஷம் இருப்பவர்களுக்கு வாழை மரத்துக்கு தாலி கட்டும் பரிகாரத்தை சொல்வார்கள். அதாவது வாழை மரத்தை ஒரு பெண்ணாக நினைத்து தாலி கட்டினால் தார தோஷம் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இது பலன் அளிப்பது இல்லை. எனவே ஆலய வழிபாடு ஒன்றுதான் தார தோஷத்துக்கு சரியான தீர்வாக அமையும். தார தோஷம் இருக்கிறது என்று தெரிந்து விட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் ஆஞ்ச நேயரை வழிபட்டாலே போதும் தார தோஷம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
செவ்வாய் தோஷத்தால் தார தோஷம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிந்தால் முருகப் பெருமானை தினமும் வழிபட்டால் போதும். வாய்ப்பு இருப்பவர்கள் அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று தினமும் வழிபடலாம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
இவற்றை செய்ய முடியாவிட்டால் தினமும் காலை-மாலை இரு நேரமும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள் போதும். வசதி இருப்பவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். வீட்டில் பரிகார பூஜை செய்தால் நல்லது. இல்லாவிட்டால் தினமும் மாலையில் விளக்கு ஏற்றும் போது முருகன் பாடல்களை பாடுங்கள் போதுமானது.
மிக கடுமையான தார தோஷம் இருப்பவர்கள் தினமும் காலை முருகன் படம் முன்பு தீபம் ஏற்றி வைத்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். கந்தசஷ்டி கவசத்தில் ஏராளமான மந்திர சொற்கள் இருக்கின்றன. அவை தார தோஷத்தின் வீரியததை குறைத்து மண வாழ்க்கை இனிமையாக அமைய வழி வகுக்கும்.
குல தெய்வ வழிபாடும் மிக மிக நல்லது. தார தோஷம் இருப்பவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று குல தெய்வ ஆலயத்துக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் நடத்தி மனமுருக வழிபட வேண்டும். சிலர் வாழை மரத்துக்கு தாலி கட்டுவதை குல தெய்வ ஆலயத்தில் வைத்து நடத்துவது நல்லது என்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமே இந்த பரிகார பூஜை செய்ய வேண்டும்.
இரண்டு திருமண யோகம் அமைந்த ஜாதகம் கொண்ட பெண்கள் வாழை மரத்துக்கு தாலி கட்டி பூஜை செய்யும் பரிகாரத்தை செய்யக் கூடாது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு இருக்கும் தார தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை வழிபடும்போது தங்களுக்கு நல்ல மணமகனை தேடித்தர வேண்டும். மனமுருக பெண்கள் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஆண்டாளையும் மறக்காமல் உரிய முறையில் வழிபட வேண்டும். இது பெண்களுக்கான தார தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதரை சேர்த்தி சேவையின் போது வழிபடுவது உடனடி பலனை தரும். ஸ்ரீரங்கம் தவிர வேறு சில ஆலயங்களும் தார தோஷத்துக்குரிய பரிகார தலங்களாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மூலங்குடியில் உள்ள மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் அருமையான தார தோஷ நிவர்த்தி ஆலயம் ஆகும். அங்கு ஈசனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை என்ற ஊரில் இருக்கும் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோவிலும் சிறந்த தார தோஷ நிவர்த்தி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் வியாழக்கிழமைகளில் வழிபடுவது மிகவும் நல்லது என்கிறார்கள். அன்றைய தினம் அர்ச்சனை செய்து வழிபட்டால் தார தோஷம் விலகுவதோடு உடனடியாக தாலி பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பொதுவாக தார தோஷத்துக்கு ஆஞ்ச நேயரையும், முருகரையும் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டாலே போதும். தார தோஷம் உங்கள் பக்கத்தில் வருவதற்கு யோசிக்கும். மனம் ஒருமித்த வழிபாடு மட்டுமே தோஷத்தை கட்டுப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.