- பழகும் காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் சொல்லிப் பழக வேண்டும்.
- சிறு குழந்தைகளோடு குழந்தையாக 10 நிமிடம் விளையாடுங்கள்.
இறைவனின் நாமத்தினை சொல்வதில் இத்தனை பலன்கள் உள்ளனவாம். இதில் எம் மதத்திற்கும் இதே பலன்கள்தான். ஒருவர் சொல்லும் எந்த இறைவன் நாமத்திற்கும் இதே பலன்தான்.
கலியுகத்திற்கு 'நாம ஜபம்' சிறந்த வழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தால் 10 நிமிடத்தில் ஆரம்பித்து ஒரு மணி நேரம் வரையும் முடிந்தால் மேலும் கூடுதலாகவும் செய்யலாம். நாம ஜபம் என்பதற்கு நேரம், காலம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லும் போது மூச்சு தானாகவே நிகழ்வது போல நாம ஜபமும் தன்னிச்சையாகவே இயங்கும். நாம் எந்த வேலை செய்தாலும் தூங்கினாலும் நாம ஜபம் ஒருவருள் இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் பழகும் காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் சொல்லிப் பழக வேண்டும். இதனால்
* உடல் கட்டுப்பட்டு சிறிது நேரம் அசைவற்று இருக்கும்.
* மனம் கண்ட திக்கில் ஓடாது.
* கொஞ்ச நேரம் மவுன விரதம் இருந்தது போல் ஆகி விடும்.
* ஒரு மணி நேரம் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்தது போல் உணர முடியும்.
* மவுனமும், உடல் கட்டுப்பட்டு சிறிது நேரம் இருப்பதும் ஒரு தவம் செய்த பலன் ஆகின்றது. ஒரு யாகம் செய்த பலன் ஆகின்றது. பாவத்தை இந்த அமைதி கரைக்கின்றது. மனதினையும், எண்ணத்தினையும் புதுமை படுத்துகின்றது.
* இறைவனை ஒளி ரூபமாக உணர முடியும். ஏனெனில் தொடர் பயிற்சியில் உருவங்கள் வராது. இந்த ஒளியினை நோக்கி ஆன்மா பயணிக்கத் தொடங்கும்.
* ஒரு மணி நேரம் எந்த தவறும் செய்யாது இருக்கின்றோம்.
* பல புனித நீர் நிலைகளில் குளித்த பலன் வந்து சேரும்.
* ஒரு மணி நேரம் வேதங்களை ஓதிய பலன் கிட்டும்.
* இதுவே தியானம் ஆகி விடும்.
* செய்து பார்க்கும் போது உணர முடியும். நம் மனம் எந்த தீய எண்ணமும் இல்லாமல் தூய்மை அடைகின்றது.
* புண்ணியம் குவியும்.
ஒரே நாமத்தினை மட்டுமே சொல்லுங்கள். ஆன்ம பலம் கூடும். அதன் பிறகு நீங்கள் எந்த கோவிலுக்கும் போகலாம். எந்த பூஜையும் செய்யலாம்.
வாழ்வினை பிறருக்காக போலியாக , மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று வாழ்ந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்யவும் கூடாது. அவரவர் மன மகிழ்ச்சிக்காக மட்டுமே நியாயமான முறையில் வாழ வேண்டும்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
கமலி ஸ்ரீபால்
இந்த வாசகத்தினை நாம் அனைவரும் அறிவோம் ஏன்? இது இறை பக்தியினை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட வாசகமா? இறை பக்தி என்பதனை அறிவுறுத்தி இருந்தாலும் அதற்கு பின்னால் அறிவுப் பூர்வமான ஒரு செயலும் இருக்கின்றது. விஞ்ஞானமும் இருக்கின்றது.
கோவில் என்றாலே அந்த காலங்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் இருக்கும். சில கோவில்களில் நான்கு வாசல் கோபுரமும் இருக்கும். அந்த கோபுரங்களில் இருக்கும் கலசங்கள் ஐம்பொன்னால் ஆனவை.
இந்த கலசங்களில் அந்த காலங்களில் தானியங்களை கொட்டி நிரப்பி வைப்பார்கள். இந்த உலோகங்கள்-ஐம்பொன் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தி கொண்டவை. தானியங்களும் இச்சக்தியினை கொண்டவை என்று சொல்லப் படுகின்றது. கேழ்வரகு, தினை, நெல், சோளம், வரகு, எள், சீமை என பல தானியங்களை இந்த கலசத்தில் கொட்டி வைத்தனர். அதிலும் வரகினை அதிகம் வைத்தார்களாம். காரணம் வரகு மின்னலைத் தாங்கும் ஆற்றலை அதிகம் பெற்றிருக்காம். அந்த தானியங்களுக்கு 12 வருடம் வரை சக்தி இருக்கும் என்பதால் குட முழுக்கு என்ற பெயரில் அந்த தானியங்களை மாற்றி உள்ளனர். மேலும் தானியங்களை பாதுகாக்கும் இடமாகவும் இந்த கலசங்கள் இருந்துள்ளன.
மேலும் இவை இடிதாங்கிகளாக பயன்பட்டன. சுற்று வட்டாரத்தில் இடி தாக்குதல் இல்லாமல் இவை பார்த்துக் கொண்டன.
எத்தனை திறமை! என்ன அறிவு! அறிவுப்பூர்வமான விஞ்ஞானத்தை புகுத்தி ஆன்மீகம் வளர்ந்தது. ஆன்மீகத்தின் காரண காரணிகளை அறிய விஞ்ஞானத்திற்கு சவால் நிறைந்த ஆய்வுகள் தேவைதான்.
நான் படித்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி தேவை என்று அதிகம் செலவழித்து வெளியில் தேடி தேடி அலைபவர்கள் 10 பைசா செலவில்லாமல் மகிழ்ச்சியாய் இருக்க வழி தெரியாமல் இருக்கின்றனரே? பெரிய விஷயம் இல்லை. இவ்வளவுதான்.
* மகிழ்ச்சி என்பது பார்ட்டி, தவறான உணவு முறை, ஆரவாரம் இவற்றில் எல்லாம் இல்லை என்பதனை முதலில் உணர வேண்டும்.
* வீட்டில் உள்ள முதியோருடன் 5 நிமிடம் தினம் பேசிப் பாருங்கள்.
* சிறு குழந்தைகளோடு குழந்தையாக 10 நிமிடம் விளையாடுங்கள்.
* கொஞ்ச நேரம் குறைந்தது 20 நிமிடம் நடக்கலாமே.
* சிறிது பக்தி, விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற புத்தகங்களை படிக்கலாம்.
* உடல் அசைவின்றி அமைதியாய் 10 நிமிடம் காலை நேரம் அமரலாம்.
* வானவில் நிறத்தில் சாலட் சாப்பிடுங்கள்.
* 2 பேரையாவது லேசாக புன்னகைக்க வையுங்கள்.
* அரை வயிறு சாப்பிட்டால் போதும். அதுவும் புளி, காரம், எண்ணை இல்லை யென்றால் உடலின் ஆரோக்கியமே மனத்திற்கு மகிழ்ச்சி தரும்.
* சிரிக்கலாமே.
* சண்டை, கொடூர கதைகள் வேண்டாமே.
* நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கின்றது.
* எப்போதும் சுத்தமாக 'பளிச்'சென்று இருக்க வேண்டும்.
* தூங்கி எழுந்தவுடனும், தூங்கப் போகும் முன்பும் "நன்றி" என்று சொல்லலாமே.
* ஏதாவது பிரச்சனை, மன நிம்மதி இல்லை என்றால் அவற்றிடம் இருந்து எப்படியாவது தள்ளி வந்து விடுங்கள்.
* நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கையே பல நன்மைகளுடன் ஒரு பரிசாக கிடைத்துள்ளது.
* ஒவ்வொருவரும் 'ஆற்றலும்','வலிமையும்' பெற்றவர்.
* 'காலம் அதன் வேலையை' செய்யட்டும். அந்த காலத்திற்குள் எத்தனை சிறப்பாக வாழ்கின்றோம் என்பதே சிறப்பு.
கீழே கூறப்பட்டுள்ள கதையினை பலர் பல விதத்தில் கேட்டிருக்கலாம். படித்திருக்கலாம். நான் படித்த போது இதன் கடைசி தீர்வு பகுதி நாம் அனைவரும் மீண்டும் அறிய வேண்டிய ஒன்று எனத் தோன்றியது. அவ்வகையில் இக்கதையினைப் படிப்போம்.
வல்லவனான, நல்லவனான ஒரு அரசன் இருந்தான். அவன் படித்தோரை மதிப்பவன். அவர்களுக்கு உணவளித்து, பரிசளித்து மரியாதை செய்பவன். ஒருமுறை ஒரு புலவர் அவரை காண வந்தபோது அவரை மரியாதை செய்து உணவளித்தான். சோதனை நிகழ்ந்தது. கழுகு ஒன்று ஒரு பாம்பினை பிடித்து செல்ல பாம்பின் விஷம் உணவில் தெளித்து விட்டது. புலவரும் அந்த உணவினை உண்டு இறந்து விட்டார். அரசன் மனம் உடைந்து போனான்.
இது இப்படியிருக்க கர்மவினைப் பயன் எழுதும் சித்ரகுப்தனுக்கு ஒரே குழப்பம். இந்த புலவர் இறந்ததன் பாவத்தினை யார் கணக்கில் எழுதுவது? அரசன் கணக்கிலா? கழுகின் கணக்கிலா? அல்லது அந்த பாம்பின் கணக்கிலா? விடை தெரியாது தவித்தான் சித்ரகுப்தன்.
குழம்பி சித்ரகுப்தன் 'எமதர்ம ராஜ'னிடம் சென்றார். நிலைமையை விளக்கினார். சற்று யோசித்த எமதர்மராஜா 'சித்ர குப்தனே. சற்று பொறுங்கள். இதற்கான விடை விரைவில் கிடைக்கும்' என்றார்.
சிறிது நாட்கள் சென்று மற்றொரு புலவர் இந்த அரசனின் உதவும் குணம் கேட்டு மன்னரைக் காண வந்தார். அவருக்கு அரண்மனைக்குச் செல்ல வழி தெரியவில்லை. அங்கு சாலையோரத்தில் ஒரு பெண் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். புலவர் அவளிடம் சென்று அரண்மனைக்குச் செல்லும் வழியினைக் கேட்டாள். அவளும் சரியான வழியினைக் கூறினாள். அத்தோடு அவள் சும்மா இருந்திருக்கலாம். 'புலவரே, இந்த அரசன் இரக்க மற்றவன். புலவர்களை கொன்று விடுபவன். அவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றாள்.
இப்போது சித்ரகுப்தனுக்கு விடை கிடைத்து விட்டது. புலவரை கொன்ற வினை, பாவம் அனைத்தும் இந்த பெண்மணிக்கே சேரும் என எழுதி விட்டான்.
பிறர் மீது வீண் பழி சுமத்தினால் அந்த பாவம் சுமத்துபவரையே முழுமையாய் சென்றடையும். திரித்து பேசுவது, உண்மை அறியாது பேசுவது, பொய் சொல்வது இவை அனைத்தும் எத்தகைய பாவங்களை சேர்க்கும் என்பதை ஒரு கதை மூலம் நன்கு புரிய வைத்து விட்டனர்.
இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்குச் சொல்லலாமே. இதோடு கூட வேறு சில நல்ல பழக்கங்களை நாமும் கற்கலாம். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.
* ஒரு வேலையும் இல்லாது சும்மா இருக்கும் மூளை சாத்தானின் தொழிற்கூடம் என்பார்கள்.
வேலை இல்லாவிட்டால் அடுத்தவர் வேலையில் மூக்கை நுழைப்போம். வம்பு, ஊர்கதை பெருகும். ஒருவரது குண நலன்களே மாறி விடும். ஆகவே இந்த பகுதிகளை நம் வாழ்வில் நிரந்தரமாக மூடி விட வேண்டும்.
இதனை நீக்கினாலே அழிவுப்பூர்வமான சிந்தனைகள் நீங்கும். பொய், குற்றம் குறை, சாக்கு போக்கு போன்ற அசுத்த கால்வாய்கள் ஒருவரிடம் இருக்காது.
மேலும் அதி புத்திசாலிகள் தான் எதனையும் செய்ய முடியும் என்ற தவறான கருத்து கூடாது.
முறையாக வேலை செய்ய, நேர்மையாக வாழ, நேரப்படி நடக்க, நேரம் தவறாமல் எதனையும் செய்ய, முனைந்த வேலை செய்ய, அன்பாய் இருக்க இதற்கெல்லாம் நல்ல மனம் மட்டுமே போதும். அதி புத்திசாலித்தனம் தேவை இல்லை என்பதனை உணர வேண்டும்.
தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால் போதும். என்டார்பின் என்ற ஹார்மோன் ஒருவரை ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க வைக்கும். நல்ல இசை கேட்பது, நல்ல தூக்கம் போன்றவை 'டோப்பமின்' மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
கொஞ்சம் நடப்பது, சிறிது சூரிய ஒளியாவது மேலே படுதல், தியானம் இவை 'செரடோனின்' சுரக்க உதவும். படபடப்பு நீங்கி மகிழ்ச்சி தரும். செய்வோமே!